செய்திகள் :

குலதெய்வக் கோயில் - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

காலையிலிருந்து ஒரே எரிச்சல் தான். எவ்வளவு முக்கியமான ஆர்டர், இது மட்டும் கிடைத்தால் இத்தனை நாள்பட்ட அத்தனை கஷ்டத்துக்கும் பலன் கிடைத்துவிடுமே.

சமையல் ஒப்பந்த வேலை செய்ய ஆரம்பித்து இந்த வாய்ப்பு வரவே மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதே. இப்படிதான் இருந்தது  என் அப்போதைய மனநிலை.

பின்னே இருக்காதா? “நான் பட்ட கஷ்டம்லாம் நீ பட வேணாம்னு தானடா உன்ன படிக்க வச்சேன்” என்ற அப்பாவின் கோபமும், “இருக்க வேலைய விட்டுட்டு இப்படி சமையல் வேலை பாக்கப்போனா எப்படிப்பா உனக்குப் பொண்ணு பாக்குறது” என்ற அம்மாவின் கெஞ்சலும், “சமையல் வேலை பாக்குறியாக்கும்” என்ற சில உறவுகளின் நக்கலும், எல்லாவற்றையும் சகித்தது இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காகத் தானே.

அதுவும் கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாகத் தானே கிடைத்தது.

இரண்டாயிரம் தொழிலார்களுக்குமேல் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் அவர்களுக்கு உணவு அளிக்கும் வாய்ப்பு. கடந்த இரண்டு நாள்களாக இரவும் பகலும் ஓயாது உழைத்துத் தயார் செய்த டெண்டர், நாளைச் சமர்ப்பிக்க வேண்டியது.

நீ இந்த வேலை பார்க்கவே கூடாதென ஆரம்பத்தில் தர்ணா செய்த அதே அப்பா தான்,

“என் ஆத்தா அந்தக் கண்ணுடைய நாயகி அருள்ல தான் உன்புள்ளைக்கு இந்த வாய்ப்பே வந்திருக்கு, அவனைப் போய் அவ கோயில்ல வச்சு சாமி கும்புட்டு அப்புறம் அதை அனுப்ப சொல்லு” எனக் கட்டளையிட்டு சென்றுருக்கிறார்.

இப்போது அதற்காகதான் எங்கள் குலதெய்வ கோயிலுக்குப் பயணப்பட்டுள்ளேன்.

வரும் வழியெல்லாம் எனக்குக் கோபம் தான், என் உழைப்பையும் திறமையையும் கருத்தில் கொள்ளாமல்,  கடவுள்தான் காரணமெனக் கட்டளையிட்டு சென்ற தந்தைமேல்; அவருக்குக் கொடிப்பிடித்து கொண்டு என்னைப் போய்வர சொல்லிக் கெஞ்சிய அம்மாவின்மேல்; இவர்கள் இருவரின் இருமுனை தாக்குதலும் தாளாமல் எண்பது கிலோமீட்டர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த என்மேல்.

தூக்கமின்மையிலும் தலைவலியிலும் என் சிந்திக்கும் திறம் மங்காமல் இருந்திருந்தால் இந்த பயணத்தைத் தவிர்த்திருக்க கூடுமோ என்னவோ.

ஊருக்குள் நுழையும்போதே எனக்கு எப்பொழுதடா வீட்டுக்கு போய்ப் படுக்கையில் விழுவோம் என்றிருந்தது.

இரண்டு நாள்களாக உறக்கம் பார்க்காத கண்களில் மணலை அள்ளிக் கொட்டியதுபோல் உறுத்தியது, எரிந்தது. புதிய புதிய வீடுகள் பல முளைத்திருந்தன.

நான் கடைசியாக ஊருக்கு எப்போது வந்தேன் என நினைவு படுத்த முயன்றேன்.

கல்லூரி படிக்கும் சமயங்களில் திருவிழாவிற்கு வந்து சென்றதும் வெகுசில சமயங்களில் குலதெய்வத்திற்கு பொங்கலிடவெனப் பங்காளி குடும்பங்களோடு வந்து சென்றதும் உண்டு. 

அதற்குப் பின் சென்னையில் வேலை பார்த்த நான்கு ஆண்டுகளிலும் சரி, தொழில் ஆரம்பித்து வீடுதங்காமல் அலையும் இந்த மூன்று ஆண்டுகளிலும் சரி, இந்த ஊருக்கு வந்ததே இல்லை என்பது மட்டும் உறுதி.

ஊரே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தது. முக்கால்வாசி வீடுகள் புதியதாகவே இருந்தன.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் மட்டுமே அவன் சிறு வயதில் பார்த்த காட்சிகளை நினைவுக்கிடங்கிலிருந்து தூசு தட்டி எழுப்புவதாய் இருந்தது.

அம்மா அடையாளம் சொல்லவில்லை என்றால் பூசாரி வீட்டைக் கண்டுப்பிடித்திருக்க முடியாதுதான். அவன் நினைத்தது போல வழி கேட்கத் தெருவில் யாரையும் காணமுடியவில்லை;

பாட்டிகள் வெளியே உட்கார்ந்து கதைப்பேச இந்தப் புதிய வீடுகளில் திண்ணைகளும் இல்லை. எல்லா வீடுகளிலும் மேலே டிஷ் ஆண்ட்டனாக்கள் இருந்தன.

அம்மா சொன்ன அந்தப் பூவரசம் மரத்தையும் அதன் பின்னால் அமர்ந்திருந்த சிறிய இளமஞ்சள் பூச்சு அடித்த வீட்டையும் கண்டுபிடிக்க அத்தனை சிரமமாக இல்லை. வாசலில் படுத்திருந்த நாய் என்னைப்பார்த்து அதன் கோரப்பற்களைக் காட்டி உறுமியது; பின் என் செவிப்பறையை சேதமாக்கும் தலையாய குறிக்கோளோடு பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது.

பூசாரியை எப்படி அழைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டின் கதவு திறந்து, பச்சை நிறத்தில் நைட்டி அணிந்த ஒரு பெண் தன் தோளில் கிடந்த, ஒரு காலத்தில் நீலமாய் இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கத் தூண்டும் ஒரு துண்டைச் சரி செய்து கொண்டே வெளியே வந்தாள்.

“யாருங்க?”

“சின்னத்தம்பி அய்யாவ பாக்க வந்தேன். இன்னைக்கு கோயில்ல பூஜைக்குச் சொல்லிருந்தோம்.”

“பானுமதிம்மா பையனா? மாமா காலையில அவரு பொண்ணு வீட்டுக்கு அவசரமா கெளம்பி போய்ட்டாங்க தம்பி. அவங்க பேத்திக்கு உடம்பு சரியில்ல, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்கனு போன் வந்துச்சு.”

இதைக் காலையிலேயே ஒரு முறை அழைத்துச் சொல்வதற்கென்ன? நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேனே.

என் எரிச்சல் முகத்திலேயே தெரிந்திருக்க வேண்டும். “கோச்சுக்காதீங்க தம்பி. என் வீட்டுக்காரரும் பொழப்பு தேடி வெளிநாடு போய்ட்டாரு. இல்லன்னா இப்படி சமயத்துல அவருதான் போவாரு. மாமா என்கிட்டே சொல்லிட்டு, பூஜ ஜாமன்லாம் வாங்கி வச்சுட்டுதான் போனாரு. நான் பொங்கச்சோறு கிண்டி வச்சிருக்கேன், போய்த் தேங்கா பழத்த வச்சு சாமி கும்புட்டுட்டு வாங்க.”

“எனக்கு இந்தப் பூஜைலாம் தெரியாதுங்க.”

“அதுக்கென்ன தம்பி நம்ம சாமி தானே, சிதறுகாயா கூட அடிச்சுட்டு வாங்க. மனசுல நெனச்சாலே கேக்குறதெல்லாம் குடுப்பா நம்ம ஆத்தா” என்றபடி உள்ளே சென்றாள்.

பிறகு எதற்குப் பூஜை பொங்கல் எல்லாம். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல. ஆனால் தன்னை அசௌகர்யப் படுத்திக்கொண்டு இந்தப் பூஜை புனஸ்காரம் எல்லாம் தேவையில்லை என்பது என் எண்ணம்.

வெளியே இருந்த பானையில் இருந்த நீரை முகத்தில் அடித்து எரிந்த கண்களைச் சற்று சமாதான படுத்திக்கொண்டேன். தன் எஜமானி வந்தவுடன் குரைப்பதை நிறுத்தி இருந்த செவலை நாய் என்னை இன்னும் சந்தேகமாவே பார்த்துக் கொண்டிருந்தது.

உள்ளே சென்ற பெண் ஒரு பெரிய வயர் கூடையுடன் வந்தாள். “சின்னபானைல தான் தம்பி பொங்கல் வச்சேன். வீட்டுக்கு மட்டும் தான. நீங்க வீட்டுக்குத் திரும்பி போகும்போது ஒரு சம்படத்துல போட்டுத் தாரேன். கோயிலுக்கு வழி தெரியும்ல? இந்த ரோட்லயே ஊரு கடைசி வரைக்கும் போனீங்கன்னா எல்லையில கோயில் தெரியும். சீக்கிரம் போய்ட்டு வாங்க தம்பி, மழை வாராப்ல இருக்கு.”

நான் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு கூடையை முன்னால் வைத்தபடி வண்டியை எடுத்தேன். வெக்கை முகத்தில் அடித்தது. ஊருக்குள் இருந்த மாற்றம் கோயிலில் கொஞ்சம் குறைவாகாவே இருந்தது. சாலையிலிருந்து இறங்கும் இடத்தில இருந்த ஆலமரத்தில் இன்னும் சில விழுதுகள் வேரூன்றி இருந்ததோ.

முன்பு கூரை கொட்டகையில் இருந்த சாமி, இப்போது ஓட்டு கொட்டகையில் இருந்தது. நடுநாயகமாக அய்யனார் பூரணை புஷ்கலையோடும், அதற்கு இரண்டு பக்கமும் மற்ற கடவுள் சிலைகளெல்லாம் போர்ப்படை வீரர்களைப் போல வரிசையாகவும் நின்றிருந்தன.

வலது பக்கத்தில் முதலாவதாக நின்றிந்தாள் கண்ணுடைய நாயகி. மற்ற சிலைகளில் கருப்பனும் சோனையும் பிள்ளையாரும் அடக்கம். சில எனக்கு அடையாளம் தெரியாத கிராமதேவதைகளாக இருந்தன.

கூடையில் இருந்த பொருள்களை எடுத்து வெளியே வைத்துவிட்டு, ஒரு நெகிழிப்பையில் சுற்றி வைக்கப் பட்டிருந்த மூன்று சிறிய பந்துப்பூ மாலைகளையும், கதம்ப சரத்தையும் எடுத்தேன். 

அதைச் சிறு துண்டுகளாக இட்டு சிலைகளுக்கு போட்டுக் கொண்டிருக்கும் போதே மின்னல் வெட்டியது, தலையிலேயே இடி விழுந்தாற்போல் சத்தம் கேட்டது. காலை ஒன்பது மணி வெயில் திடீரென மாலை ஆறு மணிபோல இருட்டி கொண்டு வந்தது.

ஊதுபத்தியை கொளுத்தி அய்யனார் சிலைக்குக் கீழிருக்கும் மண்தரையிலேயே சொருகி வைத்தேன். தேங்காயை பக்கத்தில் இருந்த கல்லில் அடித்து உடைத்து, சுருட்டி வைத்திருந்த வாழை இலையைப் பிரித்து, அதில் சிறிது சக்கரைபொங்கலும் தேங்காய் பழமும் என் பைக்குள் வைத்திருந்த நாளைச் சமர்ப்பிக்க வேண்டிய டெண்டரையும் வைத்துக் கண்மூடி கும்பிட்டேன். சிறிது நேரத்திலேயே ஊதுபத்தி மணத்தை மிஞ்சிய மண்வாசனையும் அடுத்த சில நிமிடங்களில் ‘சோ’ வென மழையும் வந்தது.

இந்த மழையில் எங்கிருந்து ஊர் போவது. கொட்டகையின் ஒரு பக்க கல்தூணில் சாய்ந்து அமர்ந்தேன்.

“ம்பா… ம்பா…” என்ற சத்தத்தில் விழித்த போதுதான் மழை நின்று தூறி கொண்டிருந்ததையும், ஆலமரத்தின் அடியில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் அவருடைய மாட்டைச் சமாதான படுத்தி கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

கைகடிகாரத்தை பார்த்தபோது இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தன. இந்த நேரத்தில், கொட்டும் மழையில் இந்த மாட்டை எங்கே ஓட்டிக்கொண்டு போகிறார் இவர்.

அந்த மாட்டைப் பார்த்தேன். மழையில் நனைந்ததில் குளித்தாற்போல் பளீரென வெண்ணிறமாகத் தெரிந்தது. விலா எலும்புகள் தெரிய, பின் எலும்புகள் இரண்டும் துருத்திக்கொண்டு சற்றே பரிதாபமான நிலையில் தான் இருந்தது. பெரியவரும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தார். அழுக்கேறிய ஒரு ரேஷன் வேட்டியும் தலையில் முக்காடாய் போட்ட ஒரு குற்றால துண்டுக்குள் ஒடுங்கிய முகமும் சற்றே கூன் விழுந்த முதுகுமாக.

இதற்கு மேல் தாமதிக்காமல் தூறலோடு கிளம்புவதே உசிதம் என்று தோன்றியது. வண்டியில் சாவியை போடும்போது பெரியவரும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எப்போது வேண்டுமானாலும் இடறி விழக்கூடும் என்ற தோற்றம் தான். சிறிது நேர உறக்கத்தில் எரிச்சலும் தலைவலியும் மட்டுப்பட்டிருக்க அவர்மேல் பரிதாபப்படக்கூட என் மனதில் இடம் இருந்தது.

“எவ்ளோ நேரம் தாத்தா மழைல நிக்கிறீங்க, கோயில் கொட்டகைல வந்து நின்றிருக்கலாம்ல?”

நான் ஏதோ கேட்க கூடாததைக் கேட்டது போல் என்னைப் பார்த்தவர், “அவ படிவாசல் மிதிப்பேனா நான்?” என்றார்.

எனக்குச் சற்று விசித்திரமாகத் தான் இருந்தது. ஏன் கேட்டோம் என்று கூடத் தோன்றி விட்டது. ஒரு வேளை புத்தி பிசகி இருக்குமோ? இவரை எப்படி தனியே விடுவது?

“உங்க வீடு எங்க தாத்தா, ஏன் தனியா வந்தீங்க?”

“தெக்கு குடியிருப்புல வடக்க பாத்த வீடு”

கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். என்னைக் கடந்து நடந்து சென்ற பெரியவரைப் பார்த்தேன். மண்ரோடு சற்று சேறும் சகதியுமாக வழுக்கி விடும் போலத் தான் தெரிந்தது. வாகனத்தை மெல்ல உருட்டிக்கொண்டு அவரோடு நடந்தேன்.

என்னை ஒரு முறை திரும்பிப் பார்த்தவர் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.

திடீரென, “தம்பி யாருனு தெரியலையே?” என்றார் கேள்வியாய்.

ஏதோ யோசனையில் இருந்தவன் சற்று திடுக்கிட்டுப் பின், “பெரிய குடியிருப்பு இராமசாமி பேரன்” என்றேன்.

“ஓ.”

மேலும் சற்று நேரம் அமைதியில் கழிந்தது. நான் கண்மாயில் நின்ற தண்ணீரையும் அதில் நின்ற சீமைக்கருவேலமரங்களில் காவலுக்கிருந்த கொக்குகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தாத்தாவின் நடையோடு மெதுவே வண்டியை உருட்டினேன்.

“உன் தாத்தனும் நானும் ஒரு சோட்டு பிள்ளைங்க” என்று ஆரம்பித்தார் பெரியவர்.

ஊருக்குள் வரும்போது இருந்த மனநிலை மாறி இப்போது கொஞ்சம் உள்ளம் தெளிவாக இருந்ததால் அவர் சொல்லவிருக்கும் பழங்கதைகளைக் கேட்டு ‘ம்’ கொட்ட தயாரானேன்.

“அவங்கப்பா பஞ்சம் பொழைக்க காரைக்குடி பக்கம் போகும்போது குடும்பத்தையும் கூட்டிட்டு போய்ட்டார். மூணாப்பு வரைக்கும் கூட ஒண்ணா தான் படிச்சோம் நாங்க. என் பொண்டாட்டிகூட உன் அப்பத்தாக்கு கொஞ்சந் தூரத்து சொந்தம் தான்.”

“அப்படியா தாத்தா?” என்று கேட்டு வைத்தேன்.

மேலும் இரண்டு நிமிடங்கள் அமைதியாகவே வந்தார். இன்னும் பாதி தூரம் கூட நாங்கள் கடக்கவில்லை. வண்டி என் கையில் கனக்க ஆரம்பித்தது. என் தாத்தாவெல்லாம் இறந்தே ஆறேழு ஆண்டுகள் ஆகி விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் எண்பது வயதிற்கு மேல் இருந்திருக்கும். இந்த வயதில் இவரை மாடுமேய்க்க விட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்.

“வீட்ல யாரையாச்சும் வரச் சொல்லிருக்கலாம்ல தாத்தா? இந்த நேரத்துல மாட்டப் புடிச்சுட்டு ஏன் தனியா வந்தீங்க?”

சிறிதுநேர அமைதிக்குப் பின், “எனக்குக் கல்யாணம் ஆகி இருபது வருஷத்துக்கு மேல புள்ள இல்ல, ஊரே என்னல்லாமோ பேசுச்சு. எவ்ளோ வலி, வேதனை, அவமானம்! என் பொண்டாட்டி எத்தனை எடத்துல அவமானப்பட்டு புழுவா துடிச்ருப்பா?”

நான் இவர் மனநிலை பிறழ்ந்தவர் என்று முடிவே செய்துவிட்டேன். என்ன கேட்டால் என்ன சொல்கிறார்.

“இந்த ஆத்தா காலடியில தான் வந்து விழுந்தோம். எப்படியாச்சும் ஒரு புள்ள குடுத்துருக்குமா, நாங்க தங்கமா கண்ணுக்குள்ள வச்சு வளக்குறோம்னு. இனிமே நமக்குப் புள்ளயே பொறக்காதுன்னு மனச தேத்திகிட்ட சமயத்துலதான் அந்த ஆத்தாவே வந்து பொறந்தாப்ல என் பொண்ணு பொறந்துச்சு.”

இப்போது ஊருக்குள் வந்து சில வீடுகளைக் கடந்திருந்தோம். தூறல்கூட நின்று பளிச்செனச் சூரியன் தெரிந்தான். இன்னுமே தெரு வெறிச்சோடி தான் இருந்தது. எங்களைத் தவிர ஆங்காங்கே சில காக்கைகள் மின்கம்பிக்கும் சாலைக்குமாய் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன.

“புள்ளைனாலும் புள்ள அப்பிடி அதிசயமான புள்ள இந்த ஊர்லயே பொறக்கல. பாலுக்கு கூட என் புள்ள அழாது. என் புள்ள தரைல நடந்தாகூட பாதம் நோகுமுன்னு கைக்குள்ளயும் மடிக்குள்ளயுமா போட்டு வளத்தோம் நானும் என் பொண்டாட்டியும். அப்பிடி வளத்த புள்ள பாத்தாப்பு படிக்கையில ஒரு பையன விரும்பிடிச்சுன்னு என் கையாலேயே அடிச்சுப்போட்டுட்டேன். முள்ளு குத்துனா கூடத் தாங்காத என் புள்ள, பாழுங்கெணத்துல போய் விழுந்துருச்சு.”

எனக்குச் சற்று சங்கடமாக இருந்தது. இப்படியொரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. எதுவும் கேட்காமல் இருந்திருக்கலாமோ.

“ஆஸ்பத்திரில உசுருக்கு இழுத்துகிட்டு கெடந்தப்போ என் புள்ளய காப்பாத்தி குடுக்கலனா உன் படிவாசல் மிதிக்க மாட்டேன்னு இந்தக் கண்ணுடையாகிட்ட சத்தியம் பண்ணேன்.”

அதனால் தான் கோயிலில் ஒதுங்காமல் மழையோடு மரத்தடியில் நின்றார் போல. தேவை இல்லாமல் பேசி அவர் மனக்காயங்களை கீறிவிட்டு விட்டோமோ என்று குற்றவுணர்வாய் கூட இருந்தது.

அவர் வீடு வந்து விட்டது போல, ஒரு சின்னக் கூரை வீட்டின் முன் இருந்த முளைக்குச்சியில் மாட்டைக் கட்டினார். இப்பொழுது ஆங்காங்கு மனிதர்கள் நடமாட்டம் தெரிந்தது. சொல்லி விட்டுக் கிளம்பலாம் என முற்பட்டேன். நான் வாயைத் திறக்கும்முன், வீட்டை ஒட்டிய சிறிய திண்ணையில் அமர்ந்தபடி தொடர்ந்தார்.

“ஒரு மாசம் ஆஸ்பத்திரில கெடந்த புள்ள வீட்டுக்கு வரும்போது அது உடம்புல உசுர தவிர ஒண்ணுமே இல்லாம ஆக்கிப்புட்டாளே. என்கிட்டயே அதிகாரம் பண்றியா, உனக்கு உசுரு தான வேணும் வச்சுக்கோன்ற மாறிப் பண்ணிட்டா. அவ எல்லைய மிதிப்பேனா நானு? என் பொண்டாட்டியும் என் புள்ளய பாத்து பாத்தே ரெண்டே வருஷத்துல போய்ச் சேந்துட்டா. 

தங்கமா வளத்த என் புள்ள வாய தொறந்து பேசி இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. என் சொத்தையெல்லாம் வித்துக்கூட என் சத்துக்கு வைத்தியம் பாத்தேன். ஒன்னும் தோதுப்படல. எப்படில்லாம் வாழ வைக்கணும்னு நெனச்சேன் என் புள்ளய? அதுக்கு நான் பீமூத்திரம் அள்ளிக் கொட்றாப்ல ஆகிட்டாளே. என் புள்ள செத்தா தேவலாம்னு என்னையே நெனைக்க வச்சுட்டாளே, அந்தக் கண்ணுடையா. நான் செத்தாலும் அவ மூஞ்சில முழிப்பேனா?”

எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. மனதின் பாரம் உடலை அழுத்துவதைப் போல ஒரு தோற்றம். உட்கார வேண்டும் போல இருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு மெதுவாகத் திண்ணையில் அமர்ந்தேன். என் மனதின் ஓட்டத்தை என்னாலேயே அடையாளம் காணமுடியவில்லை.

சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டதைப் போல் இருந்தது. தோளில் போட்டிருந்த ஈரத்துண்டால் கண்ணைத் துடைத்தபடி உள்ளே எழுந்து போனார் பெரியவர். நான் மெதுவே வண்டியை உருட்டிக்கொண்டே கிளம்பினேன்.

இப்பொழுதெல்லாம் குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றாலே இனம்புரியாத பாரம் வந்து மனதில் அமர்ந்து கொள்கிறது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

எனது சொந்தம் நீ - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவமானங்கள், உறவினரின் அவமதிப்புகள் கடந்து சாதித்த கிருஷ்ணா! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அக்னிப் பறவைகள் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உன் கண்ணில் நீர் வழிந்தால் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தோழன் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!’ - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க