`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!
அக்னிப் பறவைகள் - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை மனநலம் சார்ந்த பயிற்சிக்காக மனோதத்துவ நிபுணரிடம் அனுப்பி விட்டு வெளியே காத்திருந்த தாய்மார்கள் கலங்கிய நெஞ்சத்துடன் கண்கள் கலங்க அமர்ந்திருந்தனர்.
"சரணை கொலை செய்து சரண் அம்மாவும் செத்துப் போயிட்டாங்க" என்று மோகனா சொன்னதைக் கேட்டு கால்கள் தடுமாற நாற்காலியில் அமர்ந்தாள் கலா.
"மூன்று வருடமா தொடர்ந்து வந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று புலம்பினாங்க; அவங்க கணவர் இப்படிப் பிள்ளையை பெத்து என்னைக் கொடுமைப் படுத்துற; செலவு அதிகமாகுது என்று திட்டிக் கொண்டு இருப்பதாகச் சொன்னாங்க."
"அதுக்கு மரணம் தான் தீர்வா! நான் மத்திய அரசு வேலையையும் விட்டுட்டு லில்லிக்காக இங்கே இருக்கிறேன்; லில்லி அப்பா 'லில்லியை உங்க அம்மா வீட்டில் விட்டுட்டு வந்தால் என்னுடன் வா இல்லை உங்க அம்மா கூடவே இருந்துக்கோ அப்படினு சொல்லிட்டாங்க, என் மகனையும் வச்சிக்கிட்டு லில்லிக்காக உயிரோடு இருக்கிறேன், சரண் அம்மா செஞ்சது தப்பு."

"நேத்து கூட லில்லி அப்பா என் பணமும் உடம்பும் தேவைப் படுவதாகச் சொல்லி என்னை உடன் வரச் சொல்லி பெரிய சண்டை. அவமானத்தில கூனிக் குறுகிட்டேன்."
"எங்க அம்மா, அப்பா லில்லியை நாங்க பார்த்துக்கிறோம். நீ உன் வாழ்க்கையைப் பாருன்னு சொன்னாங்க! நம்ம மகளை நாம தான் பார்க்கனும்னு சொல்லி அவரை விரட்டி விட்டேன், சரண் அம்மா போராடி இருக்ணும்."
"லில்லி எப்படி ம்மா இருக்கா. "
"தலையை ஆட்றது நின்றுச்சி, ஆனா தனியா இருக்கா, தம்பி கூட மட்டுமே விளையாடுறா; பெரிய பொண்ணா இருக்கா, இவ்வளவு அழகைக் கொடுத்த கடவுள் எப்படி நம்மைத் தொடர்பு கொள்வதுன்னு தெரியாமல் படைச்சிட்டானே."
"என் கணவர் நல்லவர், சிவாவிற்காக எது வேண்டுமானாலும் செய்வார். நான் வாயாடி, காலையில் எழுந்து என் மகன் சிவா தெருவெல்லாம் தண்ணீர் தெளிச்சிக் கூட்டிக் கோலம் அழகாகப் போட்டு விடுகிறான். தெருவே எனக்குத் தெரியாமல் பின்னால் கேலி பண்ணிச் சிரிக்கும் போது கம்பெடுத்து எல்லாரையும் அடிக்கத் தோணுது" என்று கைகளுக்குள் முகத்தைப் புதைத்து அழுதாள் மோகனா.
"மோகனா, ஒரு முறை கோலத்தைக் கண்ணால் பார்த்தவுடன் எத்தனை புள்ளி என்று கணக்குப் பண்ணிச் சிக்குக் கோலமே சிக்காமல் போடுவது திறமைதானே, எதாவது ஒன்றில் பெரிய ஆளாக வருவான் கவலைப் படாதே" என்று மோகனாவைக் கலா ஆறுதல் படுத்தினாள்.

"என்னத்த முன்னேறப் போறான், எங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா... நினைக்கவே பயமா இருக்கு கலா" என்று எச்சிலை விழுங்கினாள் மோகனா.
"நாம ஒரு வருடத்தின் தேதியைச் சொன்னால், கிழமையைக் கணக்குப் பண்ணிச் சொல்றானே மோகனா, அப்போ நாம சொல்றதை கவனிக்கிறானே, முன்னேற வாய்ப்பு இருக்கிறது மோகனா கவலைப் படாதே."
"கலா, போன வாரம் பயிற்சி முடிஞ்சி கிளம்பி '....... மருத்துவ மனை' முன்னால் விபத்தில் அடி பட்டுக் கீழே விழுந்துட்டேன்."
"ஐயோ! என்ன ஆச்சு மோகனா?" என்று அங்கே குழுமியிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் கேட்டனர்.

"என்னை மட்டும் மருத்துவமனையில் சேர்த்துட்டு என் மகன் சிவாவை யாரும் கவனிக்கவில்லை. சிவா அப்பா பதறியடித்து வந்து நானும் அவரும் வெளியே வந்து பார்க்க..... விளையாட்டு சாமான் விக்கிற தெருக் கடையில் சிவாவை அடிச்சிக் கட்டிப் போட்டு வச்சிருந்தாங்க, அவமானத்தில என் உயிரே போயிடுச்சி" என்று எப்போதும் சிரித்துப் பேசும் மோகனா சத்தம் வராமல் குலுங்கினாள்.
"அந்த மருத்துவமனையில் நான் மயங்கி இருப்பதாக உங்கள் கணவரிடம் சொல்லி விட்டோம், வந்து கொண்டு இருக்கிறார் என்று என்னிடமும் சொல்லி லேசான காயத்துக்கு ஐம்பதாயிரம் பணம் கட்டச் சொல்லி என்னை வெளியே விட்டாங்க. இத்தனைக்கும் ரெண்டு பேரிடமும் கைபேசி இருக்குது. தொடர்பு கொள்ளனும்னு தோணலை. சிவா நினைப்பில் எங்கள் மூளையும் அங்கே மழுங்கிப் போச்சி."
"என் மகன் இரண்டு மணி நேரம் திக்குத் தெரியாம அடி வாங்கி சீரழிஞ்சிட்டான். நான் செத்துட்டா அவன் கதி, நினைச்சாலே குலை நடுங்குது."
"சிவா திருடிட்டான்னு சொன்னாங்க, நம்ம பிள்ளைகளை அடுத்தவங்க கிட்ட அடிவாங்க விடறதுக்கு..." அதற்குமேல் பேச்சுவராமல் அழுத மோகனா கூறியதைக் கேட்டு நித்திலாவின் அம்மா விக்கினாள்.
"நித்திலா அம்மா, நீங்க மருத்துவரா இருந்துகிட்டு ஏன் இப்படி அழறீங்க."
"மருத்துவம் படிச்சா எல்லாம் தெரிஞ்சவங்கனு அர்த்தமா என்ன! நித்திலா இங்க வந்து சரியாகி தமிழ் வழிக் கல்வி முறையில் படிக்கிறா. நாம சொல்லறது அவளுக்குப் பிடிச்சாத் தான் பேசுவா! போன வாரம் என்ன கோபம்னு தெரியலை மருந்துகள் வைக்கிற குடோனில் நிறைய துணிமணிகளைப் போட்டு நெருப்பு வச்சிட்டு கை தட்டிச் சிரிக்கிறா. நாங்க பார்த்ததுனால சரியாப் போச்சு. நெனைக்கவே பயமா இருக்கு" என்று நித்திலாவின் அம்மா பெருமூச்சு விட்டாள்.

"இல்லை நீங்க இல்லை, இன்னிக்கு வரும் போது பேருந்து நிலையத்தில் கலர்கலரா தாள்களை பார்த்துட்டு என் கையை உதறிட்டு ஓட ஆரம்பிச்சிட்டா கமலி. குறுக்கும் நெடுக்குமாக பல பேருந்துகள், ஒரு வினாடி ஐயோ கமலி! என்று பரிதவித்த நான் சாமி கும்பிட்டுக் கண்ணைத் திறந்தேன்! குப்பைக் காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டு ஓரமாக வந்து நிற்கிறாள்."
"கமலி அம்மா, தயவு செய்து அப்படியெல்லாம் நினைக்காதீங்க, கடவுள் நாம பார்த்துக் கொள்வோம்னு நெனச்சித் தான் இந்தப் பாவம் அறியா உயிர்களை நம்ம கிட்ட கொடுத்திருக்கும்!"
"இப்படி சொல்லிச் சொல்லி நம்மை தயார் பண்றாங்க, நாம படற துன்பத்தைப் பாருங்க, எங்கேயும் நம்மால் போகமுடியலை; பல இடங்களில் குழந்தையை வித்யாசமாக பார்க்கிறார்கள். கணவன் வீட்டினர் நாம மட்டும் இப்படிப் பிள்ளை பெத்த மாதிரியும் அவங்க மகன் வாழ்க்கையை நாம கெடுத்தது போலவும் பேசறாங்க" என்று கமலி அம்மா வெறுப்பில் வார்த்தைகளைக் கொட்டினாள்.
"அரசுப் பள்ளிகளில் கூட இவங்களைச் சேர்க்கிறது இல்லை, வைத்தியச் செலவும் எக்கச்சக்கம்."
"சொந்தத்தில கல்யாணம் பண்ணா தான் இப்படிப் பிரச்னை வரும்னு சொல்றாங்க. எனக்கு அந்நியத்தில தான் கல்யாணம்; கூட்டுக் குடும்பம் என் பங்கு வேலையும் பார்த்துட்டு இங்க வரதுக்குள்ள உயிரே போகுது."

"ஏன் எல்லோரும் நம்பிக்கை இல்லாமல் பேசறீங்க! என் மகளுக்குக் கண்ணும் தெரியாது மனநலம் பாதிச்சவளும் கூட. என் மகனுக்கு என்னை மட்டும் இப்ப அம்மானு தெரியும். இன்னிக்கு சம்பாதிச்சா தான் நாங்க சாப்பிட முடியும். என் மகளை ஒரு அறக்கட்டளை நடத்தும் இல்லத்தில் விட்டிருந்தேன். அவங்களும் என் மகளை இப்ப பெரிய பொண்ணாயிட்டா பையன்களும் படிக்கிறதால வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் உங்களை மாதிரி யோசிக்கலை, என் மகனுக்கு சரியாயிடுச்சின்னா அவன் பார்த்துக்குவான்னு முயற்சி பண்றேன்."
"உங்களுக்குப் பணம் இருக்கு, படிப்பு இருக்கு, தொழிலும் இருக்கு; ஏன் நம்பிக்கை இல்லாமல் பேசறீங்க" என்று பாலுவைப் பயிற்சிக்கு அனுப்பி விட்டு உட்கார்ந்த செல்வி நம்பிக்கையுடன் பேசினாள்.
"அட நீங்க வேற, ஜெஃப்ரிக்கு செலவு பண்ண யோசிக்கிறார் அவன் அப்பா. சொந்தக் காரங்களோட சுற்றுலா போனோம். திடீரென இவனைக் காணோம், நான் பரிதவிக்க அவன் பாட்டி நல்ல வேளை கடலுக்குள்ள போயிட்டான் என்று நிம்மதியா மூச்சு விடறாங்க."
"நான் அழுது தவிச்சி வந்த பக்கம் போயி ஓடித் தேடித் தவிக்கிறேன், இந்தப் பய தண்ணிக்கு மேல இருந்த மரக்கிளையில் உக்காந்து கை தட்டி ரசிச்சிக்கிட்டு இருக்கான்."
"இவனைப் பார்த்ததும் தான் உயிரே வந்திச்சி."
"ஜெஃப்ரி அப்பா பணம் கொடுக்க எரிச்சல் பட்டு எங்க வேலைக்காரப் பிள்ளை கூட அவங்க வீட்டுக்கு அவனைப் பேசிப் பழக அனுப்பிட்டார். அவன் கல்லெடுத்து ஒருத்தர் மண்டையை உடைக்க அவர் உயிரைக் காப்பாத்த நாயா பேயா அலைஞ்சி திரிஞ்சதது தான் மிச்சம். ஆனாலும் என் மகன் எனக்கு உயிர்!"
அன்றைய பயிற்சி முடிந்து பிள்ளைகள் ஒவ்வொருத்தராக வெளியே வர பயிற்சிக் கட்டணத்தைக் கொடுத்து விட்டு விடை பெறும் போது வெளியே வந்த மனோதத்துவ நிபுணர் பெற்றோரிடம் வழக்கம் போல் பேசினார்.
"நீங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கு அழகான அறிவான....."
இடை புகுந்தாள் கலா.
"அம்மா, நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் இல்லை. எங்களால் தான் இந்தக் குழந்தைகளைப் பார்க்க முடியும் என்று கடவுள் எங்களுக்கு இந்தக் குழந்தைகளைத் தந்தார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடவுள் எங்களைத் தண்டித்தால் பரவாயில்லை. பிறந்த ஒரு பாவமும் செய்யாத இந்தப் பிள்ளைகளை ஏன் படைக்கனும்? ஏன் தண்டிக்கனும்?"
"நாங்கள் படும் கஷ்டம் மனிதம் நிரம்பியவர்கள் அறிவார்கள். இந்தக் குழந்தைகளை எங்களால் கைவிட முடியாது. என் குழந்தை என்னிடம் வசதி இருந்தும் திண்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்னொரு குழந்தையிடம் கை நீட்ட அவளின் அம்மா என் குழந்தையை அருவருப்பாகப் பார்க்க நான் துடிதுடித்து வெந்தது எனக்குத் தான் தெரியும்."
"பள்ளிக் கூடத்தில் தலை கலைந்ததற்காக அரைமணி நேரம் என் மகளை ஆசிரியர் திட்ட திட்ட, எரிச்சல் பட்ட என் மகள் கோபத்தில் முறைக்க அதற்கும் அந்தப் பிள்ளைக்குத் தண்டனை, அதுவும் பள்ளியின் நேரம் முடிந்த பின்; இதையெல்லாம் சகித்து தாண்டி வர பாறையைப் போன்ற மனம் வேண்டும் எங்களுக்கு."
"எங்களைத் தூக்கி வைத்துப் பேசாமல் தைரியமாக பிரச்னைகளை எதிர் கொள்ளும் வழியைக் கூறுங்கள். எங்களை ஆசிர்வதிக்கப் பட்ட தேவதைகள் என்று கூறி உயரத்தில் வைப்பது போல் பள்ளத்தில் விட்டெறிய வேண்டாம். நாங்கள் அக்னியைச் சுமந்து கொண்டு நெருப்பு ஜூவாலையின் ஊடே பறக்கும் பறவைகள்" என்று பேசிய கலா வற்றாத கண்ணீருடன் தள்ளாடிக் கொண்டு வெளியேறினாள்.
கலைமதி சுப்பையா
பேரையூர்
இராமநாதபுரம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.