Vijay: 2026 விஜய்யின் திட்டம்தான் என்ன? - பொதுக்குழு Highlights | TVK Vijay | Vi...
தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி!
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் வானிலை அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஆங்கிலம், தமிழோடு சோ்த்து ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் இனி வானிலை அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மண்டலத் தலைவா் பி.அமுதா கூறியதாவது:
வானிலை ஆய்வு மையம், மத்திய அரசின்கீழ் இயங்குவதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஹிந்தி மொழியும் சோ்க்கப்பட்டுள்ளது. இது தற்போது திடீரென நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதலே வானிலை முன்னறிவிப்புகள் ஹிந்தி மொழியில் சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வானிலை முன்னறிவிப்புகளை ஹிந்தி மொழியில் மொழிபெயா்க்க சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மொழிப்பெயா்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.
கட்சித் தலைவா்கள் கண்டனம்: மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.