பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
யாரு சாமி இவன்? திக்... திக்! - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இரவு மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது, இருள் சூழ்ந்த அந்த இரவு, அமாவாசை நாளை உறுதிப்படுத்தியது .
நெற்பயிர்களை தழுவிய தென்றல் காற்று, நம் மீது படும்பொழுது அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அது அந்த கிராமத்தின் பசுமையை எடுத்துக்காட்டியது.
குமாரின் சிறிய பொட்டி கடையிலிருந்து வரும் விளக்கின் ஒளி, அந்த இருளை கிழித்து சிறிது வெளிச்சத்தை பரப்பியது.
கடையை மூட நேரம் நெருங்கியதால், கடைக்கு வெளியில் வைத்திருந்த பொருட்களை, குமார் எடுத்து உள்ளே வைத்துக் கொண்டிருந்தான்.
அண்ணா, எனக்கு இன்னொரு டீ கிடைக்குமா? என்ற குரல் வந்த திசையை மனதிற்குள் இருக்கும் கோவத்தை, அடக்கிக் கொண்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பார்த்தான் குமார். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி மெல்ல தலை அசைத்தான் குமார்.

இந்த ஆள் இதுவரை இரண்டு டீ, ஒரு பிஸ்கட் ... என அவன் வாங்கிய பொருள்களை மனக்கணக்கில் போட்டுக் கொண்டே, அந்த ஆளை நோட்டமிட்டான் குமார் .
உயரம் ஆறடி இருக்கும், பார்ப்பதற்கு மாநிறம், சுருட்டை முடி, கருகரு என்றும் மீசை, பார்ப்பதற்கு படித்தவன் போல் தோற்றம், நீட்டாக பேண்ட் சர்ட் அணிந்திருந்தான்.
குமார் கண்ணாடியில் தன்னை பார்த்தான், கருத்த சிறிது பருத்த தோற்றமும், அவனின் தொப்பையும். அந்த மனிதனின் படித்தவருக்கான பிம்பமும், அவனிடம் பேசுவதற்கும் அவன் பெயரைக் கேட்பதற்கும் கூட குமாருக்கு சிறிது தயக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த ஊருக்கு புதுசு போல, இதற்கு முன் இவனை பார்த்ததே இல்லையே, யார் வீட்டுக்கு வந்து வந்திருப்பான்?. என்று தனக்குள்ளே குமார் சில கேள்விகளை கேட்டுக் கொண்டே, டீ போட்டுக் கொண்டிருந்தான். குமாரின் கண்கள், அந்த ஆளை கழுகின் கண்களைப் போல் கூர்ந்து பார்க்க தொடங்கியது
அவன் பார்ப்பதற்கு படபடப்போடு காணப்பட்டான், நெற்றியில் வழிந்த வேர்வை துளிகளை அவ்வப்போது கைகுட்டையால் துடைத்தபடியே, தெருமுனையை நோட்டமிட்டான். அவன் பார்வை யாரையும் எதிர்பார்ப்பதை உணர்த்தியது.
அவனின் திரு திரு பார்வையும், திருட்டு முழியும், குமாரின் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தியது.
ஒருவேளை இவன், டீசன்டான திருடனாக இருப்பானோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த மனிதனின் கைபேசி அழைத்ததும், குமார் தன் காதுகளை விரித்து சற்று கூர்ந்து கவனித்தான் அவன் பேசுவதை .
அந்த மனிதன் முகத்தில் மிகுந்த படபடப்போடு கைப்பேசி எடுத்து பேச ஆரம்பித்தான். கிடைச்சிடுச்சா? நீ யார் கண்ணிலும் படலையே? அங்க தான் வச்சேன், யார் கண்ணிலேயும் பட்றாத, சத்தம் வராமல் பாரு. என படபடப்பாக பேசினான். அவனின் இந்த வார்த்தைகள் குமாரின் பயத்தை மிகவும் அதிக படுத்தியது . ஒருவேளை இவன் தீவிரவாதியாக இருப்பானோ? என்ற எண்ணம் குமாரிடம் ஊடுருவியது .

அந்த ஆளின் நெற்றியில் வழிந்த வேர்வைத் துளிகள், இப்போது குமாரை தொற்றிக் கொண்டது. அந்த ஆளின் முகத்தில் தெரிந்த பரபரப்பு குமாரின் முகத்திலும் பிரதிபலித்தது.
குமார் மனதில் படபடப்பு அதிகரித்தது. யாரு சாமி இவன்? திருடனா தீவிரவாதியா? அடக்கடவுளே, ஏன் எனக்கு இந்த சோதனை. இன்னிக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்? என்ற பல கேள்விகள் குமாரின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது . குமாரின் பயம் அவனையும் அறியாமல் அவன் முகத்தில் வெளிக்காட்டியது..
பயத்தை காட்டிக் கொள்ளாமல் சார், டீ ரெடி என்று குமார் சொன்னதைக் கேட்டு அந்த ஆள், குமாரை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான்.
குமார் தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அருகில் இருந்த வாழைப்பழம் நறுக்கும் கத்தியை இடது கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டான் . வலது கையில் டீயை, அந்த நபரை நோக்கி நீட்டினான்..
குமார் அந்த நபரின் முகத்தில் படபடப்பயும், அவன் கண்கள் எவருக்காகவோ காத்திருப்பதையும் கவனித்தான்.
குமார் தன் கைபேசியை வேகமாக எடுத்து தன் மனைவிக்கு மெசேஜ் டைப் செய்தான் பின்பு, அவள் பயந்து விடுவாள் என தனக்குத்தானே கூறிக்கொண்டு அதை வேகமாக டெலிட் செய்தான் .
இப்பொழுது யாரை நம்ப கூப்பிடுவது? தன் நண்பன் அப்துலுக்கு கால் பண்ணலாமா, என நினைத்தபடி பதட்டமாக முழித்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது குமாரின் கைபேசி “மாமா எங்க இருக்கீங்க” என்று ரிங்டோனில் சிணுங்கியது.

அது அவன் மனைவி சுமதி தான், எடுத்து படபடப்பை காட்டிக் கொள்ளாமல் குமார் பேசினான். சொல்லுடி. மாமா எப்ப வரீங்க நீங்க கேட்டபடி கருவாடு குழம்பு, சுட சுட சோறு செஞ்சு வச்சு காத்துக்கொண்டிருக்கிறேன்.
சீக்கிரம் வாங்க, ஐயோ சீரியல் போட்டுட்டான், என்று அடுத்த முனையில் இவனின் பதிலை எதிர்பார்க்காமல் சட்டுனு லைன கட் பண்ணிட்டாள்.
இவ ஒருத்தி சீரியல் பைத்தியம், இங்கு என்ன நடக்குதுன்னு, தெரியாம என்று முனுமுனுத்தபடி மொபைலை கீழே வைத்தான் குமார் .
தெருவில் சுற்றி சுற்றித் திரியும் நாயை கூட இன்னைக்கு காணும். எப்ப நாயைப் பார்த்தாலும் , கல்லை தூக்கி எறியாதே மாமா, நமக்கு ஆபத்துனா அது முன்ன வந்து நிற்கும்.
தன் மனைவி சொன்ன வார்த்தை, இப்பொழுது அவனுக்கு நினைவில் வந்தது. தப்பு பண்ணிட்டியே குமாரு, என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
மனைவி பேச்சை கேட்காம தப்பு பண்ணிட்டியே குமாரு, ”மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை” இதுக்கு அப்ப அர்த்தம் புரியல, இப்ப அர்த்தம் புரியுது என தன்னைத்தானே நொந்து கொண்டான்.
மறுபடியும் அந்த ஆளை நோட்டமிட்டான், அப்போது திடீரென்று அந்த ஆளின் முகத்தில் சிரிப்பை கவனித்தான்.
திடிரென்று இருளைக் கிழித்து வந்த அந்த சிறுமி, மாமா கிடைச்சிருச்சு என்று கத்திக்கொண்டு ஓடி வந்து அந்த ஆளை, கட்டி அணைத்துக் கொண்டாள். தன் கையில் இருந்த மணி பர்சை அவனிடம் நீட்டினாள்.
மாமா நீயும் உன் ஞாபகம் மறதியும், எத்தனை தடவை சொல்றது வெளியில் கிளம்பும் போது எல்லாத்தையும் கரெக்டா ஒரு தடவை பாத்துக்கோ. முக்கியமா மணிபர்ஸு இருக்குதான்னு பார்த்துக்கோ, அதுல பணம் இருக்குதான்னு பாத்துக்கோன்னு எத்தன தடவ உனக்கு சொல்றது மாமா.
அம்மா மட்டும் பார்த்து இருந்தாங்கன்னா, அவ்வளவுதான் யாருக்கும் தெரியாமல் பத்திரமா எடுத்துட்டு வந்தேன் என்று கூறி அவனை கட்டி அணைத்து முத்தமிட்டால்.

குமார் மாமா, இதுதான் எங்க மாமா கிரீஸ் ,பட்டணத்தில் இருந்து வந்திருக்காங்க.
இன்னைக்கு தான் ஊர்ல இருந்து வந்தாரு, ஊர சுத்தி பாக்க கிளம்புனாரு கொஞ்சம் ஞாபக மறதில, வீட்டிலேயே பர்சை மறந்து வச்சுட்டாரு.
எவ்வளவு காசு நாங்க உங்களுக்கு கொடுக்கணும் குமார் மாமா, என்று படபடன்னு பேசிய, புவனாவை வச்சகண்ணு வாங்காமல் பார்த்தபடி திகைத்துப் போய் நின்று கொண்டு இருந்தான் குமார்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
