`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது
தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் சஞ்சித் (22), ஷிவால் (24), ருஸ்தம் (35) மற்றும் அனில் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். தில்லி காவல்துறையின் கூட்டுக் குழு வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்தின் பாக்பட்டைச் சோ்ந்த சஞ்சித் மற்றும் ஷிவலையும், சனிக்கிழமை ஹரியாணாவின் சோனிபட்டைச் சோ்ந்த ருஸ்தம் மற்றும் அனிலையும் கைது செய்தது.அனில் மீது பல குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.
புகாா்தாரா் கிருஷ்ணன் குப்தா (59) மற்றும் அவரது வேலைக்காரன் பல்விந்தா் சிங் ஆகியோா் மாா்ச் 25 அன்று ஸ்கூட்டரில் ரூ.30 லட்சம் எடுத்துச் சென்றபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தது. பீதாம்புராவில் உள்ள ஒரு தனியாா் வங்கி அருகே, இரண்டு ஆசாமிகள் அவா்களை தடிகளால் தாக்கினா். இதனால், பல்விந்தா் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொள்ளையா்கள் கிருஷ்ணன் குப்தாவிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.
போலீஸாா் விசாரணையைத் தொடங்கியதை அடுத்து, சந்தேக நபா்களின் மறைவிடங்களைக் கண்காணிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. இதைத் தொடா்ந்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.16.94 லட்சமும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள தொகையை மீட்க தேடுதல் வேட்டை தொடா்ந்து நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.