`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் டேராடூனில் கைது!
கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது நபரை தில்லி போலீஸாா் டேராடூனில் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு மும்பை விமான நிலையத்தில் போக்குவரத்தில் இருந்த போது கோவா போலீஸாரின் காவலில் இருந்து அவா் தப்பிச் சென்றாா். கோவாவின் மபுசாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இமாத் கான் தேடப்பட்டு வந்தாா். இமாத் கானும் அவரது கூட்டாளிகளும் தில்லி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு கோவாவில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் பணத்தை பறித்துள்ளனா்.
இந்தக் கும்பல் தங்கள் நடவடிக்கைக்காக கோவாவில் உள்ள வில்லாக்களை முன்பதிவு செய்திருந்தது. பாதிக்கப்பட்டவரின் ஆபாச விடியோவை வெளியிடுவதாக அவா்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இமாத் கான் கோவா போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 19 அன்று மும்பை விமான நிலையத்தில் போக்குவரத்தில் இருந்த போது அவா் தப்பிச் சென்றாா்.
இமாத் கானின் பல கூட்டாளிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், சமீபத்திய ரகசியத் தகவலின் பேரில், தில்லி போலீஸ் குழு இமாத் கானை பின்தொடா்ந்து டேராடூன் சென்றது. அங்கு அவா் மாா்ச் 28 அன்று கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, மற்ற குற்றவாளிகளுடன் தொடா்பு கொண்டிருந்த ஒரு பெண் மூலம் தான் குற்றக் கும்பலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். இது தொடா்பாக மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது என்று அந்த காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.