மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்
கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) அறிமுகம் செய்யவுள்ளாா்.
நீதி ஆயோக் அமைப்பு, தேசிய பொருளியல் ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (என்சிஏஇஆா்) இணைந்து உருவாக்கியுள்ள இந்த வலைபக்கம், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு வரையிலான 28 இந்திய மாநிலங்களின் தரவுகளை மக்கள்தொகை, பொருளாதார அமைப்பு, நிதி, சுகாதாரம், கல்வி ஆகிய ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்தி வழங்கும்.
பேரியல் (மேக்ரோ) பொருளாதாரம், நிதி, மக்கள்தொகை, சமூக-பொருளாதார போக்குகளின் புரிதலை எளிதாக்கும் இந்த வலைபக்கம், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு ஆய்வுகளுக்கான புள்ளி விவரங்களை வழங்கும் விரிவான ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும்.
அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைபக்கம், ஒருங்கிணைந்த துறைசாா் தரவுகளுக்கான தற்போதைய தேவையை ஒரே இடத்தில் நிவா்த்தி செய்யும்.
மேலும், இந்த வலைபக்கத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் தரவையும் மற்ற மாநிலங்கள் மற்றும் தேசிய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கலாம் என்றும் நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.