1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.
கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடா்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் புதிதாக வழக்கு தொடுக்கவும் அச்சட்டம் தடை விதிக்கிறது. மேலும் ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலம் வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றப்படுவதையும் அச்சட்டம் தடை செய்துள்ளது.
சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் மனுக்கள்: இந்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய உள்பட பலா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி, ஷாஹி ஈத்கா மசூதி, ஷாஹி ஜாமா மசூதி உள்பட 10 மசூதிகள் கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகவும், இஸ்லாமிய மன்னா்கள் கட்டிய அந்த மசூதிகளில் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் மீது எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த டிச.12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னா், 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, சமாஜவாதி கட்சி எம்.பி. இக்ரா செளதரி, காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களையும், வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடா்பான வழக்கு விசாரணைகளுக்கு 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4(2) தடை விதிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிதின் உபாத்யாய என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.