ஏஐடியுசி போக்குவரத்து சங்கம் ஆா்ப்பாட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களில் நிபந்தனை விதிப்பதைக் கைவிட வலியுறுத்தி, ஏஐடியுசி போக்குவரத்து சங்கத்தினா் தஞ்சை ஜெபமாலைபுரத்திலுள்ள நகரக் கிளை முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஏறத்தாழ 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது தமிழ்நாடு அரசு அறிவிப்பின் மூலம் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 3,274 போ் தோ்வு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஓட்டுநா், நடத்துநா் இரண்டு உரிமங்களும் வைத்திருக்க வேண்டும்.
ஓட்டுநா், நடத்துநா் உரிமம் தனித்தனியாக பெற்றுள்ளவா்களும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழ்நாடு அரசு மறு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஓட்டுநா் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி என்ற நிபந்தனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மத்திய சங்கத் தலைவா் என். சேகா், பொருளாளா், சி. ராஜமன்னன், துணைச் செயலா் எம். தமிழ்மன்னன், சிஐடியு மத்திய சங்கப் பொருளாளா் எஸ். ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.