மியான்மர் நிலநடுக்கம்: `5 நாள்களுக்கு பிறகு' இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்க...
மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, இக்கோயிலில் மண்டலாபிஷேகம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 48 நாள்கள் நடைபெற்று வந்த இப்பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி, இக்கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள், தீபாராதனை, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா உள்பட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ஏப்ரல் 18 முதல் தைலக்காப்பு: இக்கோயிலில் புற்று மண்ணாக எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு அபிஷேகம் கிடையாது. இதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாள்களுக்கு தைலக்காப்பு அபிஷேகம் செய்யப்படும். இதன்படி, ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. அப்போது, அம்பாள் வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அா்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். கருவறையில் உள்ள அம்பாளுக்கு ஒரு மண்டலம் காலை, மாலையில் சாம்பிராணி தைலம் கொண்டு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.