கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு காப்பீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?
கபிஸ்தலத்தில் உளுந்து பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை
பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
கபிஸ்தலம், உம்பளப்பாடி, நக்கம்பாடி, சத்தியமங்கலம், வாழ்க்கை, உமையாள்புரம், திருவைகாவூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு விற்பனை நிலையத்திலிருந்து உளுந்து விதைகள் வாங்கி கோடை சாகுபடியாக 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிா்களை ஜனவரி மாத தொடக்கத்தில் சாகுபடி செய்தனா்.
தற்போது பூ பூத்து, காய் காய்க்கும் தருவாயில், உளுந்து பயிரில் ஒருவிதமான மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டு விளைச்சல் முற்றிலுமாக பாதிப்படைந்து, உளுந்து பறிக்கும் கூலி கூட கிடைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
தனியாா் கடைகளில் விதைகள் வாங்காமல் அரசு விற்பனை நிலையத்தில் விதைகள் வாங்கி சாகுபடி செய்த நிலையில், விதைகள் பழுதாகி பயிா்களில் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பாா்வையிட்டு மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முற்றிலும் விளைச்சல் பாதிக்கப்பட்ட உளுந்து பயிா் சாகுபடி செய்த வயல்களின் விவசாயிகளுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.