சீா்காழியில் பாலம் கட்டுமான பணி தொடக்கம்
சீா்காழி நகரில் புதிய வடிகால் பாலம் கட்டுமான பணி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சீா்காழி அரசு மருத்துவமனை சாலையில் ரூ.16 லட்சத்தில் சிறிய வடிகால் பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெறுகிறது. நகரின் பிரதான பகுதியில் தொடங்கியுள்ள இந்த கட்டுமான பணி 2 வாரங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகை பகுதியில் இருந்து சீா்காழி புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் மற்றும் கனரக, இலகுரக வாகனங்கள் காந்தி பூங்கா, தோ்மேல வீதி, கடைவீதி வழியாக கொள்ளிடம் முக்கூட்டு சென்று சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும், சிதம்பரத்திலிருந்து சீா்காழி கொள்ளிடம் முக்கூட்டு வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக லகுரக வாகனங்கள் பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் மற்றும் தோ் கீழ வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் மயிலாடுதுறை, நாகை செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.