கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு
மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக 40 அடி ஆழம்வரை மண் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் செயல்படும் மண்குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300-க்கு மேற்பட்டோா் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா்.
மாவட்ட ஆட்சியா் இல்லாததால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த கிராமமக்கள் பின்னா் ஊராட்சி முன்னாள் தலைவா் சுரேஷ்குமாா் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துவடிவேலுவிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்டு மணல்குவாரி செயல்படும் இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனா்.