'குகேஷுக்கு வழங்கியதைப் போல கார்த்திகாவுக்கு கோடிகளில் பரிசுத்தொகை வழங்காதது ஏன்...
குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? உண்மை என்ன?
ஃபிரிட்ஜை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் காந்தங்களால் (Fridge Magnets) மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதாக ஒரு விஷயம் பரவி வருகிறது. இந்த வதந்தியின் உண்மைத்தன்மை என்ன? நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது குறித்து விரிவாகக் காணலாம்.
ஃபிரிட்ஜில் ஒட்டப்படும் காந்தங்கள், அதன் குளிரூட்டும் அமைப்பில் குறுக்கிட்டு, அதிக மின்சாரத்தை நுகரச் செய்கிறது என்ற தகவல்கள்தான் உலா வருகின்றன. ஃபிரிட்ஜின் கதவு சரியாக மூடப்படாமல் போவதற்கும், அதன் செயல்திறன் குறைவதற்கும் இந்தக் காந்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூற்றுகளில் உண்மையில்லை என்று நிபுணர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

நிபுணர்கள் சொல்வது என்ன?
ஃபிரிட்ஜ் மேக்னட்கள் சராசரியாக 5 மில்லிடெஸ்லா (millitesla) காந்தப்புலத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால், ஒரு மின்னணு சாதனத்தைப் பாதிக்க குறைந்தது 1,000 மில்லிடெஸ்லா வலிமை தேவை.
இந்தக் காந்தப்புலம் ஃபிரிட்ஜின் மின்சார பாகங்களையோ அல்லது அதன் செயல்திறனையோ பாதிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது அல்ல என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் ஃபிரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பு என்பது கம்ப்ரசர் மற்றும் குளிர்பதன வாயு மூலம் செயல்படுகிறது. இதற்கும் ஃபிரிட்ஜின் வெளிப்புறத்தில் ஒட்டப்படும் காந்தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இந்தக் காந்தங்களால் ஃபிரிட்ஜின் மோட்டார் அல்லது அதன் செயல்திறனில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.





















