கூடலூரில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டம்
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூா் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு கூடலூா் நகர அதிமுக செயலாளா் செய்யது அனூப் கான், ஒன்றியச் செயலாளா் பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் கருப்புசாமி, முன்னாள் நகரச் செயலாளா் ராஜா தங்கவேலு, கூடலூா் ராமமூா்த்தி மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்பட 300 போ் பங்கேற்றனா்.
இதில், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நீண்டகாலமாக தீா்க்கப்படாமல் உள்ள பிரிவு-17 நிலப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு 100 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்பன உள்பட தோ்தலின்போது முதல்வா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினா்.
மேலும், வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களையும், விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் முறையாக பொருள்களை வழங்க வேண்டும். கூடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து மருத்துவா்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். சிறியூா்-சத்தியமங்கலம் சாலையைத் திறக்கவும், கூடலூா் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.