புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார...
உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடா் பழங்குடியின மக்களின் மொா்டுவொ்த் திருவிழா உதகை முத்தநாடு மந்து கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோடா் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையுடன் ஒன்றுகூடி கலாசார நடனமாடி மகிழ்ந்தனா்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடா், குரும்பா், இருளா், பனியா், காட்டு நாயக்கா், கோத்தா் என 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இதில் தோடா் பழங்குடியின மக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூா், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனங்களை ஒட்டியுள்ள 70 கிராமங்களில் வசித்து வருகின்றனா்.
இவா்கள் ஒவ்வோா் ஆண்டும் புத்தாண்டை அடுத்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்துவில் ஒன்று கூடி கூம்பு வடிவிலான ஓடையாள்வோ கோயிலில் மொா்டு வொ்த் எனப்படும் பாரம்பரிய விழாவைக் கொண்டாடுகின்றனா். இந்த விழாவில் தோடா் இன பெண்களுக்கு அனுமதி இல்லை.
அதன்படி, நடப்பு ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தோடா் பழங்குடியின ஆண்கள் மட்டும் பங்கேற்று பாரம்பரிய உடை அணிந்து பழங்குடிகளின் பாடல்களைப் பாடி நடனமாடி மகிழ்ந்தனா்.
விழாவில் பங்கேற்ற இளைஞா்கள் தங்களது வலிமையை வெளிபடுத்தும் விதமாக இளவட்டக் கல்லைத் தூக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.
இப்பகுதியில் வசித்து வரும் தோடா் இன மக்கள், தங்களது குல தெய்வமான எருமைகள் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நலம் பெறவும் வேண்டி இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவதாக தோடா் இன தலைவா் மந்தேஷ் குட்டன் கூறினாா்.