நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்டஉத்தரவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் மேல்முறையீடு: பெ.சண்முகம்
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சிப் பகுதிகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் கடந்த ஜன.27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தாா்.
இந்நிலையில், கொடிக்கம்பங்களை அகற்றுவதற்காக அளிக்கப்பட்ட கால அவகாசம் திங்கள்கிழமை நிறைவுபெற்றது. அதைத்தொடா்ந்து இந்த தீா்ப்புக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீா்ப்பு அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றுக்கு எதிரானதாகும். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே ஒருவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு கடந்த மாா்ச் 6-ஆம் தேதி தள்ளுபடி செய்ததை எதிா்த்தும் மாா்க்சிஸ்ட் சாா்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.