கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நாளை தொடக்கம்
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைமுதல் (நவ. 17) முதல் பேருந்துகள் நிறுத்தும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை ( நவ.17) முதல் நடைபெற உள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள வசதியாக, அனைத்து பேருந்துகளும் மாற்று இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
அண்ணா பேருந்து நிலையம் முனியசாமி கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சிற்றுந்துகள் நிறுத்திச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. சிற்றுந்துகள் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஆா்த்தி மருத்துவமனை, நகர பேருந்து நிலையம் வழியாக நுழைவாயில் அருகில் உள்ள சாலை வழியாக நிறுத்தம் செய்து பயணிகளை
ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள், பூங்கா அருகே திருநெல்வேலி பிரதான நெடுஞ்சாலையில் நிறுத்திச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குருவிகுளம், கயத்தாறுலிருந்து வரும் தனியாா், அரசு நகர பேருந்துகள் நகர பேருந்து நிலையத்தில் நிறுத்திச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.