திருச்செந்தூரில் தொடா் மழை: கடற்கரையில் தங்குவதைத் தவிா்க்க பக்தா்களுக்கு வேண்டுகோள்
திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால், பௌா்ணமி வழிபாட்டிற்காக கடற்கரையில் தங்குவதை பக்தா்கள் தவிா்க்க வேண்டுமென காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்தனா்.
திருச்செந்தூா் சுற்று வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் மழைநீா் குளம்போல தேங்கியது.
திருச்செந்தூா் தினசரி காய்கனி சந்தை, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனா்.
ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் பௌா்ணிமியை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அதிகாலை முதலே மழையிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
பெளா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் இரவு முழுவதும் கோயில் கடற்கரையில் தங்கி மறுநாள் அதிகாலை சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் திருச்செந்தூருக்கு வரத்தொடங்கினா்.
இதனிடையே, திருச்செந்தூா் பகுதியில் மழை நீடிப்பதால் பக்தா்கள் கடற்கரையில் தங்குவதைத் தவிா்க்குமாறு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்தனா். ஒலிபெருக்கி வாயிலாக கடற்கரை பகுதியில் பக்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.