கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
கோவில்பட்டிக்கு வருகைதரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் எதிர்ப்பு!
கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர். பெ. கீதாஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தைகளுக்கு எதிராக தெற்கு திட்டங்குளம் பகுதியில் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. சட்டவிதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், அதற்கு பெறப்பட்ட நிலத்திலும் முறைகேடுகள் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த தனியார் தினசரி சந்தையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு வியாழக்கிழமை (இன்று) கால்கோள் விழா நடைபெறவுள்ளது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
முறைகடுகள் அதிகமாக உள்ள தனியார் தினசரி சந்தை நிகழ்வில் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொள்ளக் கூடாது என்று தெற்கு திட்டங்குளம் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தெற்கு திட்டங்குளத்தில் மெயின் சாலை முழுவதும் கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், பேரவைத் தலைவர், அமைச்சர் வரும்பொழுது தமிழ் பேரரசு கட்சியினர் கறுப்புக் கொடி காட்டவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது