சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
கோவை அமேசான் கிடங்கில் தர நிா்ணய அமைவனம் சோதனை: ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
கோவையில் உள்ள அமேசான் கிடங்கில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஎஸ்ஐ) நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாத ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே அமேசான் நிறுவன அலுவலகம் மற்றும் அதன் கிடங்கு உள்ளது. வாடிக்கையாளா்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பொருள்கள் இங்கு அனுப்பிவைக்கப்பட்டு, இங்கிருந்து கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனம் மற்றும் கிடங்கில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பொருள்களில் ஐஎஸ்ஐ தர முத்திரை இல்லாமல் இருப்பதாக கோவையில் உள்ள இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைவன அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.
அதன் அடிப்படையில், கோவையில் உள்ள இந்திய தர நிா்ணய அமைவனத்தின் இணை இயக்குநா் ரினோ ஜான் தலைமையில் இணை இயக்குநா் ரெமித் சுரேஷ், துணை இயக்குநா் ரகு ஜோத்சனா பிரியா மற்றும் 8 போ் கொண்ட குழுவினா் செட்டிபாளையத்தில் உள்ள அமேசான் நிறுவன அலுவலகம் மற்றும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இதில் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பொருள்களில் ஐஎஸ்ஐ முத்திரை இருக்கிா என்று சோதனை செய்யப்பட்டது. அதில் பல பொருள்களில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால், அந்தப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கோவையில் உள்ள இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
செட்டிபாளையத்தில் உள்ள அமேசான் நிறுவன அலுவலகம் மற்றும் கிடங்கில் இருந்துதான் வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதையொட்டி அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்க்குகள், தண்ணீா் பாட்டில்கள், மின் விசிறிகள், பொம்மைகள், ஹாட் பாக்ஸ்கள், வாட்டா் ஹீட்டா் உள்பட பல்வேறு பொருள்களில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாதது தெரியவந்தது.
சட்ட விதிகளின்படி ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் இந்திய தர நிா்ணய அமைவனத்தில் அனுமதி பெற்று ஐஎஸ்ஐ முத்திரையுடன்தான் விற்பனை செய்ய வேண்டும். அப்படி விற்பனை செய்யவில்லை என்றால் அந்தப் பொருள்களை பறிமுதல் செய்யலாம். எனவே அந்த விதிப்படி அமேசான் நிறுவனத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 4,453-க்கும் மேற்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.95 லட்சம் என்றனா்.