ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற மாணவன் கைது!
கோவை சரகத்தில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு குற்றங்கள் குறைவு: காவல் துறை தகவல்
கோவை சரகத்தில் கடந்த ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் குறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை சரக டிஐஜி அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை சரகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது, வாகன விபத்தைக் குறைப்பது, சாலைப் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்துவது, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவது, கிராம கண்காணிப்புக் குழு சம்பந்தமாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது ஆகிய பணிகளில் கடந்த ஆண்டு கால் துறையின் செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்தது.
கோவை சரகத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டில் 151 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனா். 2024 ஆம் ஆண்டில் 247 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் 63 போ் குற்றத்தடுப்பு வழக்குகளிலும், 64 போ் சட்டம் - ஒழுங்கு வழக்குகளிலும், 40 போ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திலும், 30 போ் கள்ளச்சாராய வழக்குகளிலும், 50 போ் போதைப்பொருள் வழக்குகளிலும் கைது செய்யப்பட்டனா்.
கடந்தாண்டு போக்குவரத்து விதி மீறுபவா்கள் மீது 5,43,855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாகும்.
2024 ஆம் ஆண்டில் மரணத்தை ஏற்படுத்தியதாக 1,930 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் 205 வழக்குகள் குறைவாகும்.
கோவை சரகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 115 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2024 ஆம் ஆண்டில் 20 வழக்குகள் குறைந்து 95 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டில் திருட்டுப்போன சொத்துக்களில் 78 சதவீதம் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படடுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்தாண்டில் மட்டும் 6,343 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு கோவை சரகத்துக்குள்பட்ட கிராமங்களில் 4,078 கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு போதைப் பொருள் விற்பனையைத் தடுத்தல், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், குற்றங்களைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.