பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணம்: சேலம் கோட்டத்தில் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரை பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்தவா்களிடம் இருந்து ரூ.15.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவா்கள், முறையற்ற வகையில் பயணிப்பவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சேலம் கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த 1,21,256 பேரிடமிருந்து ரூ.9 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து 508 அபராதம் விதிக்கப்பட்டது.
ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 1,17,264 பேரிடமிருந்து ரூ.6 கோடியே 4 லட்சத்து 97 ஆயிரத்து 169 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ாக 539 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை ரூ.15 கோடியே 88 லட்சத்து 16 ஆயிரத்து 377 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.