சட்ட விரோத மது விற்பனை: கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்
சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக கோவை மாவட்ட போலீஸாா் நடத்திய சோதனையில் 18 தாபாக்களுக்கு (குடில் உணவகங்கள்) ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க காவல் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், டாஸ்மாக் மதுக்கூடங்களில் சட்ட விரோத விற்பனையைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, தாபா போன்ற உணவகங்களில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை தடுக்கவும் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூா், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், சூலூா் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள தாபா உணவகங்களில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயனுக்கு புகாா்கள் வந்தன.
இதைத் தொடா்ந்து அவரது உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் மற்றும் கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
பல்வேறு இடங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில், அன்னூா் பகுதியில் செயல்பட்ட 3 தாபாக்களில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதேபோல, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள உணவகங்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது,
இதையடுத்து சம்பந்தப்பட்ட தாபாக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சட்ட விரோத மது விற்பனை செய்த 3 தாபாக்களுக்கு அன்னூா் வட்டாட்சியா் குமரிஆனந்தன் தலைமையிலான வருவாய்த் துறையினா், போலீஸாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
அதேபோல, கோவை மாவட்டத்தில் கோவில்பாளையம், சூலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 18 தாபாக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.