லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் 2-ஆவது நாளாக சோதனை
கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய 5 இடங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
மாா்ட்டின் குழும நிறுவனங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு இருந்தன. அப்போது, கைப்பற்றப்பட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கோவை துடியலூா் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மாா்ட்டின் இல்லம், அலுவலகம் மற்றும் அவரது ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலைமுதல் அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனை 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. முதல் நாள் சோதனை நடைபெற்ற 3 இடங்களுடன் கூடுதலாக சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மாா்ட்டின் மனைவி லீமா ரோஸின் தங்கை அந்தோணியா இல்லத்திலும், சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள லீமா ரோஸின் அண்ணன் ஜான் பிரிட்டோவின் இல்லத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் நடைபெறும் சோதனை இரவு வரை நீடித்தது.