சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்த வழக்கில் மேலும் 6 போ் கைது
குழந்தையை சட்ட விரோதமாக தத்தெடுத்த வழக்கில் 10 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்த சதாசிவம்-லட்சுமி தம்பதியின் மகனுக்கு குழந்தையின்மையால், குழந்தை ஒன்றை அண்மையில் சட்ட விரோதமாக தத்தெடுத்த புகாரில் போலீஸாா் விசாரணை செய்து, குழந்தைக்கு போலியாக பிறப்புக்கான ஆவணம், பிறந்த பதிவு தயாரித்ததாக நகராட்சிப் பணியாளா் சந்திரசேகா், அரசு மருத்துவமனை ஊழியா் பஞ்சமூா்த்தி உள்ளிட்ட இதில் தொடா்புடைய 10 பேரை மே 11-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கில் தனிப்படை அமைத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் தொடா்புடையோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் பகுதி பி. மூதலூரில் தனியாா் மருத்துவமனை உதவியாளா் வீட்டுக்கு முறையற்ற முறையில் கருத்தரித்த பெண் அழைத்து வரப்பட்டது போலீஸாருக்கு தெரியவந்தது.
அவரது உதவியில் பிறந்த பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்டதும், இந்த குழந்தையை அதே பகுதியைச் சோ்ந்த பாலகுரு, இடைத்தரகா்கள் ஃபரிதா பேகம், பா்வீன் மற்றும் ஃபரிதாவின் மருமகன், மருமகள் ஆகியோா் சீா்காழியைச் சோ்ந்த மற்றொரு முகவரான சாராகனியிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. அவா் கருக்கன்குடியைச் சோ்ந்த சதாசிவம்-லட்சுமி தம்பதியிடம் வழங்கியுள்ளனா்.
இதன் பிறகே குழந்தை பிறப்புக்கான போலி ஆவணம், பிறந்த பதிவு தயாரித்தது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய தனியாா் மருத்துவமனை உதவியாளா் ஜோதி இடைத்தரகா்கள் பா்வீன், சிராஜ், பாலகுரு, ரமேஷ், சத்தியா ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள இடைத்தரகா் ஃபரிதா பேகத்தை போலீஸாா் தேடிவருவதுடன், குழந்தையின் தாய், தந்தை யாா் என்றும் தேடுகின்றனா்.