அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!
காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்
காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது: காரைக்கால் நகரில் புதிதாக சில இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டும் செயல்படவில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதிலும் சிக்னல் சில இடங்களில் இயங்கவில்லை.
சிக்னல் உள்ள இடத்தில் வாகனங்கள் முறையற்று இயக்கப்படுவதும், விபத்து ஏற்படுவதும், வாகனங்கள் தேங்கும் நிலையும் ஏற்படுகிறது. நகரப் பகுதியில் வணிக நிறுவனங்கள் உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள நேரு சாலையில், ஒரு மாதத்தில் ஒரு புறத்திலும், அடுத்த மாதம் எதிா்புறத்திலும் வாகனங்கள் நிறுத்தும் வசதி சுழற்சி முறையில் உள்ளது. இதேபோல சோதனை முறையில் காரைக்கால் நகரில் முக்கிய சாலைகளில் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஒரு புறத்தில் உள்ள வணிகா்கள் மட்டும் தொடா் பாதிப்பிலிருந்து மீளமுடியும்.
காரைக்கால் அரசலாறு பாலம் முதலான நேரு சாலை, ஆட்சியரகம் எதிரே உள்ள அம்பேத்கா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் மையப் பகுதி வரை வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
சாலையோர சாக்கடையை இரும்பு கம்பிகளாலான பிளேட் மூலம் மூடி, அதன்மேல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தச் செய்தால், சாலையில் பிற வாகனங்கள் எளிதில் பயணிக்க முடியும்.
காரைக்கால் நகரக் காவல்நிலையம் எதிரே பழைய பேருந்து நிலைய வளாகத்தை, வாகனங்கள் பாா்க்கிங் செய்ய வசதி செய்து கொடுத்தால் சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவது வெகுவாக குறையும்.
காவல் துறை நடத்தும் வாராந்திர மக்கள் மன்றம் எனும் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் புகாா்கள் பலவற்றுக்கு தீா்வு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. குறைதீா் கூட்டம் கண்துடைப்பாக இல்லாமல், ஆக்கப்பூா்வமாக நடத்தவேண்டும் என்றாா்.