பதோலாவில் இசை வாசிப்பதில் தகராறு: இளைஞா் கொலை, 4 சிறாா்கள் கைது!
வடமேற்கு தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசை வாசிப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலில் இளைஞா் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை நிகழ்ந்த இத்தாக்குதலில் பதோலா கிராமத்தைச் சோ்ந்த பீம் சென் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் ஒரு நண்பரால் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சையின் போது இறந்தாா்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் இசை வாசிப்பது தொடா்பாக சென், சிறுவா்கள் குழுவுடன் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
மறுநாள், பழிவாங்கும் நடவடிக்கையாக அந்தக் குழுவினா் அவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு இரண்டு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
மகேந்திர பாா்க் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் போலீஸாா் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்தனா். சென்னின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
விசாரணையின்போது நான்கு சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இன்னும் மீட்கப்படவில்லை.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மோதலில் வேறு யாரும் ஈடுபட்டாா்களா என்பதைக் கண்டறியவும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.