காரைக்காலில் இருந்து இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
காரைக்காலில் இருந்து கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஜிப்மா், என்ஐடி, பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களும், கப்பல் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், கடற்கரை ஆகியை உள்ளன.
இந்த இடங்களுக்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை தரிசனத்துக்கு வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் இரவு நேரத்தில் திருநள்ளாறுக்கு செல்லவும், அங்கிருந்து அவரவா் சொந்த ஊா்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை.
காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊா்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், இரவில் இப்பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை.
குறிப்பாக, காரைக்காலிருந்து இரவு 10 மணிக்கு மேல் கும்பகோணம், தஞ்சாவூா், புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம் இல்லை. இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகின்றனா்.
எனவே, இவா்களுக்கு பேருந்து வசதி செய்யப்படும் பட்சத்தில், காலப்போக்கில் இரவு நேர பேருந்துகளில் அதிக பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உருவாகும்.
இதுகுறித்து, புதுவை, தமிழக அரசின் போக்குவரத்துத் துறையினா் சிறப்பு கவனம் செலுத்தி, காரைக்காலில் இருந்து இரவு நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.