`சட்டம் ஆண்களையும் பாதுகாக்க வேண்டும்’ - மனைவி குறித்து வீடியோ வெளியிட்டு TCS ஊழியர் விபரீத முடிவு
மனைவியின் துன்புறுத்தலால் கணவன் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் அதுல் சுபாஷ் என்ற எஞ்சினியர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது அது போன்று மேலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த மாணவ் சர்மா(25) என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பையில் டி.சி.எஸ். நிறுவனத்தில் எஞ்சினியராக பணியாற்றும் சர்மா தற்கொலை செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சர்மா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மொபைல் போனில் வீடியோ ஒன்றை பேசி வைத்திருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

7 நிமிட வீடியோவை சர்மாவின் சகோதரி இப்போது கண்டுபிடித்துள்ளார். தூக்கு கயிற்றில் தலையை வைத்துக்கொண்டு அந்த வீடியோ பேசப்பட்டுள்ளது. அதில், சட்டம் ஆண்களையும் பாதுகாக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஆண்களே இல்லாத காலம் வரும். எனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். ஆனால் நான் என்ன செய்ய முடியும். நான் இறப்பதைப்பற்றி கவலைப்படவில்லை. நான் சாகப்போகிறேன். ஆனால் ஆண்களை பற்றியும் சிந்தியுங்கள். யாராவது ஆண்களைப்பற்றியும் பேசவேண்டும். அவர்கள் தனிமையாகி விடுகிறார்கள். நான் போன பிறகு அனைத்தும் சரியாகிவிடும். இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானவுடன் சர்மாவின் மனைவி நிகிதாவும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், `தற்கொலை செய்த தினத்தில் என்னை எனது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்துவிட்டு சென்றார். என்னைப்பற்றி அவர் வீடியோவில் தெரிவித்து இருப்பவை அனைத்தும் மிகவும் பழையது. திருமணத்திற்கு பிறகு உள்ளது கிடையாது. இதற்கு முன்பும் அவர் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை நானே மூன்று முறை காப்பாற்றி இருக்கிறேன். மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து உதைத்திருக்கிறார். இது குறித்து அவரின் பெற்றோரிடமும் தெரிவித்து இருக்கிறேன். இது கணவன் மனைவி பிரச்னை என்று கூறி அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவரது சகோதரியிடமும் இது குறித்து தெரிவித்து இருக்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை வைத்து, சர்மாவின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நிகிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பிரேத பரிசோதனையின் போது எந்த விதபுகாரும் வரவில்லை. வீடியோ வந்த பிறகு நிகிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகிதா தன் மீதான புகார் பொய்யானது என்று தெரிவித்துள்ளார். இரண்டையும் விசாரித்து வருகிறோம்''என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
