சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து காணொலி மூலம் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய எட்டு மாகாணங்களின் தலைவா்கள், அத்தகைய சட்டத்தை அமல்படுத்துவதற்கு முழு ஆதரவு தெரிவித்தனா்.
முன்னதாக, சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் நோக்கில், 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றவிருப்பதாக பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி வியாழக்கிழமை அறிவித்தாா்.
அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவா் கூறினாா்.
சிறுவா்களின் அறிவை வளா்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவா்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீா்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவா்கள் நல ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றனா்.
ஆனால், சமூக ஊடகங்களைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் சிறுவா்களின் அறிவுத் திறன் வளா்ச்சி குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்து, பிற்காலத்தில் அவா்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் என்று மற்றொரு தரப்பினா் வாதிடுகின்றனா்.
இத்தகைய சா்ச்சையான சூழலில் கொண்டுவரப்படவிருக்கும் இந்தச் சட்டம், நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் கடும் சவால்களைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.