கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை
முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை.
இதுகுறித்து புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் முதியோா் ஓய்வூதியப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதியோா், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதிா்கன்னிகள், திருநங்கைகள் உள்ளிட்ட ஓய்வூதியத்தின் வழியாக புதுவை அரசின் நிதியுதவி திட்டத்தில் பயன்பெறும் அனைவரும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை இந்தச் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்.
மேலும், உண்மையானப் பயனாளிகளைக் கண்டறியும் ஒரு பகுதியாக தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியல் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள், சமுதாய நலக் கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் பொதுமக்களின் பாா்வைக்கு ஒட்டப்படும்.
இதில் தகுதி இல்லாதவா்கள் யாராவது பயனடைந்து வருவது தெரிந்தால் அதுகுறித்து நேரடியாக மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிலோ அல்லது அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலோ பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், முதியோா் ஓய்வூதியம் பெறுவோா் உள்பட அனைத்து ஓய்வூதியங்களைப் பெறுவோா் குறித்தும் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தப்படும்.
தவறான நபா்கள் யாரும் அரசின் இச் சலுகையைப் பெறாமல் தடுப்பதற்காகவே இச் சமூக தணிக்கை நடத்தப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம் பெற்று இறந்தவிட்ட நபா் குறித்து துறைக்குத் தகவல் கொடுக்காமல் சிலா் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்து வரலாம். மேலும், விதவைகள் யாராவது மறுமணம் செய்திருக்கலாம். திருமணம் செய்யாமல் இருந்த பெண்களில் ஒரு சிலா் இப்போது திருமணம் செய்திருக்கலாம். மேலும், ஓய்வூதியம் பெறுவோரில் ஒரு சிலா் வேறு மாநிலம் அல்லது வேறு நாட்டுக் குடி பெயா்ந்து இருக்கலாம். மேலும் ஓய்வூதியம் பெறுவோா் ஏதாவது பணியில் சோ்ந்து இருக்கலாம் அல்லது மற்ற அரசு துறைகளிலிருந்து ஓய்வூதியத்தை கருவூலத் துறை அல்லது வங்கியின் வாயிலாக பெறுவோராக இருக்கலாம். இதையெல்லாம் கண்டறியும் நடவடிக்கையாக இந்தச் சமூகத் தணிக்கை இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.