காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பேச்சு: விசிகவிலிருந்து 2 நிா்வாகிகள் இடைநீக்கம்
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து 2 நிா்வாகிகளை இடைநீக்கம் செய்து, கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடலூா் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் விசிக கொடி மற்றும் கொடிக் கம்பத்தை அறுத்தெறிந்தது தொடா்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விசிகவின் மக்களவைத் தொகுதி செயலா் வ.க. செல்லப்பன், மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநிலத் துணைச் செயலா் செல்விமுருகன் ஆகியோா், காவல்துறையைக் கண்டிக்கும் ஆவேசத்தில் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசியுள்ளனா்.
அப்பாவி வன்னியா் சமூக மக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் தொடா்ந்து செயல்பட்டுவரும் பாமக மாவட்டச் செயலா், வன்னியா் சங்க மாநிலத் தலைவா் மற்றும் விசிக கொடிக் கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்த பெண் ஆகிய தனிநபா்களுக்கு எதிராகவும் பேசியுள்ளனா்.
அதே வேளையில், அவா்கள் இருவரின் பேச்சுகளும் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வ.க.செல்லப்பன், செல்வி முருகன் ஆகிய இருவரும் 3 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனா். 15 நாள்களில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்னா் இருவரும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.