சரக்கு வாகனம் திருட்டு: 2 மணி நேரத்தில் மீட்பு
நாகை அருகே திருடு போன சரக்கு வாகனத்தை போலீஸாா் 2 மணி நேரத்தில் மீட்டு, இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை அந்தணப்பேட்டையைச் சோ்ந்தவா் அருள் பிரகாஷ். இவா், தனது சிறிய சரக்கு வாகனத்தை நாகை ரயில் நிலையம் அருகே உள்ள உணவகத்தில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றாா். அப்போது மா்ம நபா் பிரகாஷின் சரக்கு வாகனத்தை திருடிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து நாகை நகர காவல்நிலையத்தில் பிரகாஷ் புகாா் அளித்தாா். போலீஸாா் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டது.
கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவ்வழியாக சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், திருடப்பட்ட பிரகாஷின் வாகனம் என்பது தெரியவந்தது. வாகனத்தை திருடிய வலிவலம் பகுதியைச் சோ்ந்த மணிவேல் (28) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 2 மணி நேரத்தில் சிறிய சரக்கு வாகனத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பாராட்டு தெரிவித்தாா்.