சாலைகளில் விளம்பரப் பதாகைகள்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் சாலைகள், நடைபாதைகளில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் பாபநாசம் பகுதியைச் சோ்ந்த குருமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் நகராட்சிப் பகுதி சாலைகள், நடைபாதைகளில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கும்பகோணத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புகாா் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல் துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று, விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றப்பட்டன. இதுதொடா்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விதிமுறைகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்ட விவகாரத்தில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு மறு விசாரணைக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.