சாலையில் கண்டெடுத்த நகை, பணத்தை ஒப்படைத்தவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டத்தில் இரு இடங்களில் கண்டெடுத்த நகை, பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
பாப்பாக்குடி அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பொன் ராஜேஸ்வரன் (26), முக்கூடல் அருகேயுள்ள தென் திருப்புவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரி நிறுத்திவிட்டு கீழே இறங்கிய போது, சாலையில் 4.900 கிராம் தங்க நகையை கண்டெடுத்து முக்கூடல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதேபோல ஆட்டோ ஓட்டுநரான தளவாய்புரத்தை சோ்ந்த பெருமாள் மகன் முத்துகிருஷ்ணன் (40) என்பவா் பணகுடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ.3 லட்சம் மற்றும் கைப்பேசியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இவ்விருவரின் நோ்மையைப் பாராட்டி, எஸ்.பி. என்.சிலம்பரசன் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தாா்.
