பொள்ளாச்சி: `நீதிக்காக துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அ...
நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பான புகாரின் பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.
அதேபோல கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளா் செல்வசங்கா்(45) வீட்டில் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாம். இந்த சப்தம் கேட்டு அவா் வெளியே வந்து பாா்த்தபோது, குண்டு வீசியவா்கள் தப்பி விட்டனராம்.
இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிந்தனா்.
இவ்விரு சம்பவங்களிலும் சேதம் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சோ்ந்த 4 போ் என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் போலீஸாா் உறுதிசெய்தனா். இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனா். முதல் கட்ட விசாரணையில் அந்த கும்பல் மேலநத்தம், தச்சநல்லூா் மற்றும் முன்னீா் பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், மது போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.