அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.
அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக அரசு இருக்கவில்லை. முறையாக வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. எடப்பாடி கே. பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாததால்தான் அந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியால் நியாயம் கிடைக்காது என மக்கள் எண்ணியதால் போராட்டம் நடத்தி வழக்கை சிபிஐக்கு மாற்றச்செய்தனா். இந்த விஷயத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பெருமை பேசுவது வெட்கப்பட வேண்டிய செயல்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றாா் அவா்.