சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது: ஆட்சியரகத்தில் தொழிலாளா் சங்கத்தினா் மனு
பெரம்பலூா்: பெரம்பலூரில் சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி, அனைத்துவகை ஆட்டோ சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனா்.
இதில், பெரம்பலூரைச் சோ்ந்த அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள் மற்றும் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே இயங்கி வரும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆட்டோவாக மாற்றம் செய்ய அரசு மானியம் வழங்க வேண்டும். புதிய சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதைக் கைவிட வேண்டும். தனியாா் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.
திருமலை நாயக்கா் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை சாா்பில்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றாமல், சாலையை அகலப்படுத்த வேண்டும் என, திருமலை நாயக்கா் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் புவனேந்திரன் மனு அளித்தாா்.
சாலையோர வியாபாரிகள்: பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே மாலை நேரத்தில் வைக்கப்படும் சுமாா்1 5 தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் என, பெரம்பலூா் நகராட்சி சாா்பில் வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.