Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு வீட்டுச் சிறை
சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
இது குறித்து சிங்கப்பூா் சிறைத் துறை அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் தற்போது வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வீட்டுச் சிறையில் அவா் எஞ்சிய தண்டனைக் காலத்தைக் கழிப்பாா். அவரது உடலில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சோ்ந்த எஸ். ஈஸ்வரன், வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவா். தனது பதவிக் காலத்தின்போது சிங்கப்பூரைச் சோ்ந்த 2 முக்கியத் தொழிலதிபா்களிடம் இருந்து கடந்த 2015-ஆம் ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் வரை மதிப்புமிக்க பரிசுப் பொருள்களை எஸ். ஈஸ்வரன் பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 6.9 மீட்டா் பரப்பளவுள்ள தனி சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.