Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்ய மருத்துவ உணவுகள்!
அஷ்டாம்ச கஞ்சி
தேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.
இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.
மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.
கொள்ளு குழம்பு
தேவையானவை: கொள்ளு - அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் - 2 கையளவு, தக்காளி - 4, பூண்டுப் பல் - 6.
செய்முறை: கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும்.
இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.
கறிவேப்பிலைக் குழம்பு
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/8usj08mh/WhatsApp_Image_2025_02_07_at_7_24_39_PM.jpeg)
தேவையானவை: விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.
குழம்புக்கு: நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பூண்டுப் பல் - 4, புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.
மருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
பொரிவிளங்காய் உருண்டை
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/gka238m7/WhatsApp_Image_2025_02_07_at_7_24_28_PM.jpeg)
தேவையானவை: பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு, வெல்லம் - அரை ஆழாக்கு, ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரோட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
நவதானிய அடை
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/e3hllulh/WhatsApp_Image_2025_02_07_at_7_25_43_PM.jpeg)
தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.
கற்றாழைப் பச்சடி
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/59ww9h1j/WhatsApp_Image_2025_02_07_at_7_26_48_PM.jpeg)
தேவையானவை: கற்றாழைச் சோறு - 100 கிராம் (நன்றாகக் கழுவியது), வெல்லம் - 50 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கற்றாழையில் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை, நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கற்றாழை சோறு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி, வெல்லம் உருகி பச்சடி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
மருத்துவப் பலன்கள்: வெயில் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்காமல் பாதுகாத்து, வறட்சியைத் தடுக்கும் உணவு இது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs