தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!
தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
மொத்தம் 5,000 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்தாா்.
மேலும், ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 விவிபேட் கருவிகள் (வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி) ஆய்வுக்குட்படுத்தப்படுவதாக அவா் தெரிவித்தாா்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
30 நிமிடங்களுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு தோ்தல்களில் எந்த வெற்றியும் பெறாத நிலையில், காங்கிரஸ் சில தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் களம் கண்டுள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆதிக்கம் அப்படியே இருக்கிறதா அல்லது 1998-க்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும்.