கேஜரிவால், மணீஷ் சிசோடியா முன்னிலை; அதிஷி தொடர்ந்து பின்னடைவு!
தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளனர். முதல்வர் அதிஷி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காலை 10.50 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணைய இணையதளத் தரவுகளின்படி பாஜக - 40, ஆம் ஆத்மி - 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்(பட்லி தொகுதி) மட்டும் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதலில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், தற்போது 386 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்கைவிட முன்னிலையில் உள்ளார்.
ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் தில்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியாவும் 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷி 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.