36,000 மலர்ச் செடிகள்; காய், கனிகள்... புதுச்சேரி அரசின் மலர் கண்காட்சி.. குவியும் பார்வையாளர்கள்!
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா 2025 மற்றும் 35-வது காய்கறி, கனி, மலர் கண்காட்சி துவக்க விழா நேற்று மாலை நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, கண்காட்சியை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வேளாண் விழா மற்றும் காய்கனி, மலர் கண்காட்சி பலூன்களை பறக்க விட்டு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில், வண்ண மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் வடிவமைப்புகள், கொய் மலர்கள், தொட்டி வளர்ப்பு மலர்ச் செடிகள், வீரிய காய்கறி ரகங்கள், வீரிய பழ ரகங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/ckkvqrtt/a3eee3e3_91b8_498d_a4bb_fa41b62c878d.jpg)
வேளாண் விவசாயிகளுக்க்கான அரங்குகள்
புதுச்சேரி அரசுத் துறையின் கால்நடை துறை சார்பில் புதுவிதமான ஆடு, மாடு போன்ற கால்நடைகள், மீன்வளத்துறை சார்பில் வண்ண மீன்கள், மாவட்ட ஊரக முகமை சார்பில் கைவினை பொருள்கள், சுயதொழில் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்கள், விவசாயிகள் துறை சார்பில் மானிய விலையில் டிராக்டர் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைத்துள்ளன.
புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையம், கால்நடைக் கல்லூரி, காரைக்கால் வேளாண் கல்லூரி, வேளாண் தொழில்நுட்ப முகமை, பெங்களூரைச் சார்ந்த இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், திருச்சியைச் சார்ந்த தேசிய வாழைப்பழ ஆராய்ச்சி மையம் ஆகியவை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
19 வகைகளில், 36,000 மலர் செடிகள்..
புதுச்சேரி லாஸ்பேட்டையில், வேளாண் துறை தோட்டக்கலைப்பிரிவின் கீழ் இயங்கும் நாற்றங்கால் பிரிவில், பால்சம், காலண்டுலா, செலோசியா, கோலியஸ், காஸ்மோஸ், டாலியா, சாமந்தி, பிரெஞ்சு சாமந்தி, பெடுனியா, சால்வியா, போகன்வில்லா, ஸ்நாப்டிராகன், வெர்பினா, வின்கா, சின்னியா, டைதோனியா போன்ற 19 வகைகளில், 36,000 மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிரதான தோட்டக்கலை நர்சரிகள் அரங்குகள் அமைத்து, விதை, உரங்கள், தொட்டி வகைகள், செடிகள் மற்றும் பழக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனைக் வைத்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/3b3lk4k2/c18e6241-32fa-40dc-ad02-badf85d36c0b.jpg)
பார்வையாளர்களை கவர்ந்திடும் வண்ணம் இசை நடன நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியினை முன்னிட்டு, தொட்டி வளர்ப்பு, கொய் மலர்கள், காய்கறிகள், கனிகள், அலங்கார செடிகள், தோட்டங்கள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் மற்றும் தானிய ரகங்கள் என ஒன்பது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு நிறைவு நாளான 9-ம் தேதி (நாளை) மாலை பரிசுகள் வழங்கப்படும். அதிக பிரிவுகளில் பரிசுகள் பெறும் ஆண் மற்றும் பெண்ணிற்கு மலர் ராஜா மற்றும் மலர் ராணி பட்டம் வழங்கப்படும்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில், டீ கப், சேவல், மலர்களில் இருந்து தேன் எடுக்கும் வண்டு, திராட்சிகளால் ஆன திருவள்ளுவர், காளைமாடுடன் வீரர், புஷ்பா திரைப்படத்தில் வரும் காட்சி போல் மாட்டு வண்டியில் செம்மரம் ஏற்றி செல்வது உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தது. நேற்று மாலை கண்காட்சி துவங்கியவுடன் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து கண்காட்சியை பார்வையிட்டு போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மலர் மற்றும் காய்கறி செடிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/p0mrqn44/c352797e-1dc7-4b68-b95c-5ede0a08b11e.jpg)
அதேபோல சிறைக்குள் விவசாயம் என்ற அரங்கில், சிறைவாசிகள் சிறைக்குள் பயிரிட்ட காய், கனிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதேபோல அவர்கள் தயாரித்த பாக்கு மரத்தட்டு, கிளாஸ், சிற்பங்கள் போன்றவை விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.