ஆப்ரேஷன் டைகர் : ஆசைக்காட்டும் பாஜக; 6 எம்.பிக்களுக்கு வலைவிரிக்கும் ஷிண்டே - எச்சரிக்கும் தாக்கரே!
மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து அதில் இருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தற்போதைய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தன் வசம் எழுத்து வந்துவிட்டார். இதனால் உத்தவ் தாக்கரேயிடம் இருந்த சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் ஏக்நாத் ஷிண்டேயிடம் சென்றுவிட்டது. தற்போது உத்தவ் தாக்கரே புதிய சின்னத்துடன் தேர்தலை சந்தித்து வருகிறார். இப்பிரிவினைக்கு பா.ஜ.க முக்கிய காரணம் என்று உத்தவ் தாக்கரே கருதிக்கொண்டிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதேசமயம் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/7t4lbodg/eknath-shinde-on-cm-post-270246697-16x91.webp)
தற்போது உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் அவரிடமிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மாநில தொழிற்துறை அமைச்சர் உதய் சாவந்த் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த சில எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்களது கட்சியில் சேரப்போவதாக தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா `ஆப்ரேஷன் டைகர்’ என்ற பெயரில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை தங்களது அணிக்கு இழுக்கும் வேலையில் ஏக்நாத் ஷிண்டே ஈடுபட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர். ஏக்நாத் ஷிண்டேயும் இதனை உறுதிபடுத்தி இருந்தார். உத்தவ் தாக்கரே கட்சியில் தொடர்ந்து இருந்தால் தங்களது தொகுதிக்கு போதிய நிதி கிடைக்காது என்பதாலும், உத்தவ் தாக்கரேயுடன் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது கிடையாது என்று முடிவு செய்து 6 எம்.பி.க்கள் அணி மாற முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது.
ஆனால் இச்செய்தியை உத்தவ் தாக்கரே கடுமையாக மறுத்துள்ளார். உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பேசிய தென் மும்பை எம்.பி அர்விந்த் சாவந்த், ``தங்களுக்கு யாரும் போன் செய்யவில்லை. நாங்கள் கட்சி மாறப்போவதாக வதந்தியை பரப்பி வருவது கண்டனத்திற்குறியது. கடினமான நேரத்தில் நாங்கள் தொடர்ந்து கட்சியில் தொடர்ந்து இருப்போம். '' என்று குறிப்பிட்டு இருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/9h58kvz0/eknath-shinde-on-cm-post-270246697-16x91.webp)
உத்தவ் தாக்கரேயும் இது தொடர்பான செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே இது குறித்து அளித்த பேட்டியில்,'' நீங்கள்(ஷிண்டே) அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. வருமான வரித்துறை, போலீஸை ஒதுக்கி வைத்துவிட்டு எங்களுடன் போட்டியிட வாருங்கள். எது உண்மையான சிவசேனா என்பதை நாங்கள் காட்டுகிறோம். எங்களை பிரிக்க நினைத்தால் நாங்கள் உங்களது தலையை உடைத்துவிடுவோம்''என்று உத்தவ் தாக்கரே கடுமையாக எச்சரித்தார்.
மத்தியில் பா.ஜ.க கூட்டணி அரசுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு இப்போது எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவில்தான் நரேந்திர மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். எனவேதான் உத்தவ் தாக்கரேயிடமிருந்து எம்.பி.க்களை இழுத்து வரும்படி பா.ஜ.க ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது தகவல். அப்படி இழுத்து வந்தால் மத்தியில் அமைச்சர் பதவி கொடுப்பதாக ஏக்நாக் யிடம் பா.ஜ.க ஆசை வார்த்தை கூறி இருப்பதாக உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play