கேஜரிவால், மணீஷ் சிசோடியா முன்னிலை; அதிஷி தொடர்ந்து பின்னடைவு!
Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாமா?
Doctor Vikatan: அடிபட்டாலோ, வலி ஏற்பட்டாலோ ஆயின்மென்ட் தடவச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி உபயோகிக்கும் ஆயின்ட்மென்ட், ஜெல் போன்றவை வலியை நீக்குவதில் எப்படிச் செயல்படுகின்றன.... அவை உண்மையிலேயே பலன் தருபவையா... அல்லது தற்காலிக நிவாரணத்துக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றனவா? ஒவ்வொரு முறை ஒவ்வொரு பிரச்னைக்குப் போகும்போதும் விதம்விதமான ஆயின்மென்ட், ஜெல் பரிந்துரைக்கிறார்கள். அந்த நேரம் தவிர, அவை பலனற்று, எக்ஸ்பைரி ஆகி, தூக்கி எறிய வேண்டியிருக்கிறது. ஒரே ஆயின்மென்ட், ஜெல்லை எல்லா விஷயங்களுக்கும் மேற்பூச்சாகப் பயன்படுத்த முடியாதா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/6abcd7cd-523c-4d3b-9708-435ce33b8fc6/WhatsApp_Image_2024_04_08_at_1_55_56_PM.jpeg)
வலிக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் நிறைய வகைகள் உள்ளன. அதைப்போலவே அந்த மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்ச பக்க விளைவுகளைக் கொண்ட, வெளிப்பூச்சு மருந்துகள்தான் ஆயின்மென்ட்டுகள். இவற்றில் க்ரீம், ஜெல், எண்ணெய் உட்பட நிறைய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதனதன் சாதக, பாதகங்கள் உள்ளன.
உடல் முழுவதும் வலி இருந்தாலோ, வலியுடன் காய்ச்சலும் இருந்தாலோ, ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி இருந்தாலோ, தேய்மானம் இருந்தாலோ வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கொடுப்பார்கள். அதுவே சின்னதாக அடிபட்டாலோ, வீங்கினாலோ, தசைப்பிடிப்பு ஏற்பட்டாலோ, மருந்துகள் எடுத்து முடித்த பிறகு, மருந்துகளின் அளவைக் குறைப்பதற்காக, வலி ஏற்படும்போது மட்டும் எடுத்துக்கொள்ள ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். இதில் க்ரீம், ஜெல், ஆயில் போன்றவை மருந்துகளின் உட்சேர்க்கைக்கு ஏற்ப மாறுபடும்.
ஒவ்வொரு முறை ஒவ்வொருவிதமான ஆயின்மென்ட்டை மருத்துவர் பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உங்கள் பிரச்னைக்கேற்பவே பரிந்துரைக்கப்படும். உதாரணத்துக்கு, சருமத்தில் சிவப்புத்தன்மையைக் குறைப்பதற்கு, ரத்த ஓட்டத்தைக் குறைப்பதற்கு, வலியைக் குறைப்பதற்கு, தசைகளைத் தளர்த்துவதற்கு, வீக்கத்தைக் குறைப்பதற்கு என மருத்துவர் பரிந்துரைக்கும் ஆயின்மென்ட்டுக்கு பிரத்யேக காரணம் இருக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/yxvfqff6/frozen-shoulder-woman-holding-cold-compress-ice-bag-pack-her-painful-shoulder798657-3854.jpg)
எல்லா ஆயின்மென்ட்டுகளுக்கும் பொதுவான குணம் ஒன்று உண்டு. எல்லாமே லேசான எரிச்சல் தன்மையைக் கொடுக்கும் தன்மை கொண்டிருக்கும். இதை 'கவுன்ட்டர் இரிட்டன்ட் பிராப்பர்டி' (counter irritant property ) என்று சொல்வோம். நம் முதுகுத்தண்டில் 'பெயின்கேட்' என ஒன்று இருக்கும். நம் உடலின் சிக்னல்கள், இந்த கேட் வழியேதான் மூளைக்குப் போகும். இந்த கேட் மிகவும் சிறியது என்பதால் ஒரு சிக்னல் மட்டும்தான் போக முடியும். வலி மிகக்குறைவாக இருக்கும் சமயத்தில், கவுன்ட்டர் இரிட்டன்ட் பிராப்பர்டி உள்ள ஆயின்மென்ட் போடும்போது அந்த எரிச்சல் என்ற சிக்னல், வலி என்ற சிக்னலை மறைத்துவிடும். எரிச்சல்தான் கேட் வழியே மூளைக்குப் போகுமே தவிர, வலி போகாது. இப்படித்தான் பெரும்பாலான மருந்துகள் வேலை செய்கின்றன.
எனவே, உங்களுக்கு மருத்துவர் எந்தக் காரணத்துக்காக எந்த ஆயின்மென்ட்டை பரிந்துரைக்கிறாரோ, அதை அந்தக் காரணத்துக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். மாற்றி உபயோகிக்கக்கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.