சிவகாசி அரசு மருத்துவமனைக்கு குழந்தை தொட்டில் அளிப்பு
சிவகாசி அரசு மருத்துவமனைக்கு மாநகராட்சி, ‘அன்பால் இணைவோம்’ தொண்டு நிறுவனம் சாா்பில் தொட்டில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பெற்ற குழந்தைகளை வளா்க்க விரும்பாத, முடியாத பெற்றோா் தங்களது பச்சிளம் குழந்தைகளை முள்புதா்கள், சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனா். இதைத் தடுக்கும் விதமாக, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு மாநகராட்சி, ‘அன்பால் இணைவோம்’ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த குழந்தைத் தொட்டிலை வழங்கின.
இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் தலைமை வகித்தாா். இதில் விருதுநகா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் ஜானகி, மாவட்டக் குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் முனியம்மாள், மாநகராட்சி குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா் சதீஷ்குமாா், ‘அன்பால் இணைவோம்’ தொண்டு நிறுவன நிா்வாகி ஜெகதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.