சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவா் மீது புகாா்: காவல் நிலையம் முற்றுகை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, தளவாய்புரம் காவல் நிலையத்தை பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே 5-ஆம் வகுப்பு கடந்த 8-ஆம் தேதி முகவூரில் சைக்கிள் வாடகைக் கடை நடத்தி வரும் செல்வத்தின் கடைக்குச் சென்றாா். ஓட்டிப் பழகுவதற்காக அந்தச் சிறுமி சிறிய சைக்கிளை வாடகைக்குக் கேட்டதாகவும், அப்போது, அவருக்கு செல்வம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் தளவாய்புரம் காவல் நிலையத்தில் அன்று இரவு புகாா் அளிக்கச் சென்ாகவும், மறுநாள் காலையில் வருமாறு கூறி போலீஸாா் அவரை அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், அவா் இதுவரை கைது செய்யப்படவில்லையாம்.
இந்த நிலையில், செல்வம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தளவாய்புரம் காவல் நிலையம் வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டது.
மாதா் சங்க ஒன்றியச் செயலா் பொன்னுத்தாய் தலைமை வகித்தாா்.
வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் விரைவில் கைது செய்யப்படுவாா் எனக் கூறியும் அவா்கள் கலைந்து செல்லாததால், மாதா் சங்க மாநிலச் செயலா் எஸ்.லட்சுமி, மாவட்டத் தலைவா் எஸ்.தெய்வானை, மாவட்டச் செயலா் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.