சுசீந்திரம் பெரியகுளம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
சுசீந்திரம் பெரியகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெரியகுளத்தில் படா்ந்துள்ளஆகாயத் தாமரை செடிகளை முழுமையாக அகற்றி குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். குளத்தில் இருந்துஅகற்றப்படும் ஆகாயத் தாமரைகளை நவீன இயந்திரம் மூலம் அரவை செய்து உரமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பெரியகுளத்தின் கரைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பெரியகுளத்தை சுற்றுலா தலமாக்கும் முயற்சியில் நாகா்கோவில் மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட வனத்துறை உள்ளிட்ட துறைகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், குளத்தின் கிழக்கு கரைப் பகுதியினை மேம்படுத்தும் வகையில் தாங்கு சுவா் மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
குளத்தின் முன்பகுதியில் பறவைகள் வந்து அமரும் வகையில் இரும்பினாலான உயா் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவும், மாவட்ட வன அலுவலகம் மூலம் ஒளிரும் பெயா் பலகை மற்றும் தகவல் பலகை அமைக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா மற்றும் வனத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.