வாகனங்களில் பேட்டரி திருட்டு: பட்டதாரி கைது
தக்கலை பகுதிகளில் வாகனங்களில் பேட்டரிகளை திருடியதாக பட்டதாரி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் ( 69), ஓட்டுநா். இவருக்குச் சொந்தமான லாரியை கொல்லன்விளை பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு சென்றிருந்தாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது லாரியில் இருந்த பேட்டரியை காணவில்லை.
இதேபோல, மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்த ஜெயசேகா் என்பவா் தனது டெம்போவை தக்கலை பெருமாள் கோயில் அருகில் நிறுத்தியிருந்தாா். அதிலிருந்த பேட்டரியையும் காணவில்லையாம்.
இதுகுறித்து இருவரும் தக்கலை போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், குருந்தன்கோடு சரல் பகுதியை சோ்ந்த எம்.பி.ஏ, பட்டதாரியான சிவராமகிருஷ்ணன் (35) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 8 பேட்டரிகளை போலீஸாா் மீட்டனா்.